‘சின்னக்கலைவாணர் விவேக் சாலை’ விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு நடிகர் விவேக் பெயர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயர்ப்பலகை திறந்து வைத்தார்

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் விவேக். மக்களால் `சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டவர். கடந்த 2021, ஏப்ரல் 17ம் தேதி மரணமடைந்தார். விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 17ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி விவேக்கின் மனைவி அருட்செல்வி, தனது மகள் அமிர்தா நந்தினி மற்றும் விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ‘விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்’ என்று கோரிக்கை கடிதம் கொடுத்தார். அதை ஏற்ற முதல்வர், உடனே அரசாணை வெளியிடுமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், விவேக் நினைவாக, அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலை “சின்ன கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மாவதி நகரில் நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் நடிகர் விவேக்கை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சென்னை  மாநகராட்சி மேயர் பிரியா, விருகம்பாக்கம்  சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கணக்கு குழுத்தலைவர் க.தனசேகரன், கவுன்சிலர்கள் கே.கண்ணன், ரத்னா லோகேஷ்வரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

* நடிகர் விவேக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

நடிகர் விவேக் கோரிக்கை ஒன்றை என்னிடம் வைத்தார். ‘கலாம் சொன்னபடி, 1 கோடி மரங்கள் நடும் பணியை கொண்டிருக்கிறேன். 32 லட்சம் மரக்கன்றுகள் வரை நட்டு இருக்கிறேன். ‘கிரீன் கலாம்’ திட்டத்தில் இந்த 2 ஆயிரம் மரக்கன்றையும் சேர்த்துக்கொள்வேன் என்று சொன்னார் நினைவில் வாழும் நடிகர் விவேக். பசுமை சைதை திட்டத்தின்கீழ் இதுவரை 98,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சைதையில் ஒரு லட்சமாவது மரக்கன்றை நடும்போது அம்மரக்கன்றுக்கு நடிகர் விவேக்கின் பெயரை வைத்து, அந்த ஒரு லட்சம் மரக்கன்று நட்ட கணக்கையும் தங்கள் கணக்கில் சேர்த்து விடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அப்போது ஒரு தயக்கம் இருந்தது. சராசரியாக 61,441 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அன்றைய ஆட்சியாளர்கள் நடிகர் விவேக் மறைவதற்கு 2 நாளுக்கு முன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தார். நடிகர் விவேக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இப்போது 10 கோடியே 83 லட்சம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தமிழ்நாட்டில் 88% நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கிறது. எனவே நடிகர் விவேக்குக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் நன்றிக்குரியவர்களாவர்.

Related Stories: