×

மரியுபோல் தொழிற்சாலை மீது பயங்கர தாக்குதல் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க முயற்சி: 10 லட்சம் மக்களை சட்ட விரோதமாக கடத்தியதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மரியுபோல், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரமாக போரிட்டு வருகின்றன. மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையை தவிர, மற்ற அனைத்து பகுதிகளையும் ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனால், தொழிற்சாலை உள்ள பதுங்கு குழியில் இருந்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தினர். இந்த பதுங்கு குழியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தஞ்சம் புகுந்து இருந்தனர். அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஐநா உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டன.

இதன் பலனாக கடந்த சில நாட்களாக தொழிற்சாலையில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்புடன் இடம் பெயர்ந்து வருகின்றனர். பதுங்கு குழியில் சுமார் 500க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள், குழந்தைகளின் சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தொழிற்சாலைக்குள் ரஷ்ய படைகள் நேற்று நுழைந்து தாக்குதல் நடத்தின. ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கெர்சனை சுதந்திர குடியரசு நாடாக அறிவிக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக, இங்குள்ள மேயர்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் கடத்தப்பட்டு உள்ளதாகவும், இணையம் மற்றும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இங்கு ரஷ்யாவின் ரூபிள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய பள்ளி பாடத்திட்டமும் விரைவில் திணிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யாவின் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு  நகரங்களில் இருந்து இதுவரை 50 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதில், 2 லட்சம் குழந்தைகள் உட்பட 10 லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு வந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘ரஷ்ய படைகள் உக்ரைன் மக்களை, ரஷ்யா அல்லது ரஷ்யா கட்டுப்பாடு பகுதிகளுக்கு சட்ட விரோதமாக அழைத்து சென்றுள்ளன’ என்று குற்றம்சாட்டி உள்ளார். இதை ரஷ்யா அதிபர் மாளிகை மறுத்து உள்ளது. இதற்கிடையே, மரியுபோல் இரும்பு தொழிற்சாலை, கருங்கடலில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. கருங்கடலில் அருகே உள்ள ஒடேசா மற்றும் கார்கிவ்வில் ரஷ்யா கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். இந்த பகுதிகளையும் பிடித்த பிறகு, இந்த மாத இறுதியில் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை தனது நாட்டுடன் இணைக்கவும், மற்ற பகுதிகளை தனி குடியரசாக அறிவிக்கவும் ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* புடினுக்கு ஆபரேஷன்: கைமாறும் அதிகாரம்?
ரஷ்ய அதிபர் புடின் வயிற்று புற்றுநோய், பார்கின்சன் நோய் மற்றும் ஸ்கிசோ ஆபெக்டிவ் பிரச்னையால் கடந்த 18 மாதங்களாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவருடைய உடலின் வெளி தோற்றத்தில் பல மாற்றங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மட்டும் 35 முறை புற்றுநோய் மருத்துவரிடம் புடின் பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதனால், அவர் சில காலம் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது என்பதால், அனைத்து அதிகாரத்தையும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

* பலவீனமானது ரஷ்ய ராணுவம்
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உக்ரைன் மீதான போரில் இழப்புகளைச் சந்தித்த பின்னர் ரஷ்ய ராணுவம் இப்போது பொருள் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் கணிசமாக பலவீனம் அடைந்துள்ளது. உக்ரைனில் இதன் படைகளால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை’ என்று கூறி உள்ளது.

* உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் உரை
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினர். இங்கு உரையாற்றும் முதல் உலக தலைவர் ஜான்சன் ஆவார். இதில் ஜான்சன் பேசுகையில், ‘இது உக்ரைனின் மிகச்சிறந்த தருணம். கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டோர்மர் எதிர்ப்பு விமான அமைப்புகளை பிரிட்டன் வரும் வாரங்களில் உக்ரைனுக்கு அனுப்புவோம்’ என்று தெரிவித்தார்.


Tags : Ukraine ,Mariupol ,Russia , Attempts to annex Ukrainian territories seized by terrorist attack on Mariupol factory: Russia - Jலlezki accused of smuggling 10 million people
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...