தித்திக்கும் தீபாவளி டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* பலகாரம் செய்ய எண்ணெய் வைக்கும்போது இஞ்சி, வாழை பட்டையை அம்மியில் நசுக்கிப்போட்டு பொரித்து எடுத்த பிறகு உபயோகித்தால், பலகாரம் அதிகம் எண்ணெய் குடிக்காது. எண்ணெயும் பொங்கி வழியாது.

* தீபாவளி பலகாரத்தை டப்பாவில் வைக்கும் போது உப்பைத் துணியில் கட்டி உள்ளே போட்டு வையுங்கள். காரல் வாடை வராது.

* குலோப் ஜாமூனை வழக்கம்போல உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடி செய்துகொள்ளவும். ஜாமூனை பொரித்து எடுத்தவுடன் சர்க்கரைப் பொடியில் பிரட்டி எடுத்தால் பிரமாதமான ‘உலர் ஜாமூன்’ தயார்.

* தீபாவளி சமயத்தில் பலகாரம் அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் அஜீரணம், பசியின்மையைப் போக்க சுக்கு - 50 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், பெருங்காயம் - 10 கிராம், மிளகு - 10 கிராம், சீரகம் - 10 கிராம் இவைகளை நன்றாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்து (மிக்ஸியில் அரைத்து) சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை குணமாகும்.

- என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

*லட்டு செய்வதற்கான கடலை மாவு கரைசல் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நீளநீளமாக விழாமல் முத்து முத்தாக எண்ணெயில் விழும்.

*ஓமப்பொடிக்கு ஓம வாட்டர் ஊற்றுவதைவிட வீட்டிலேயே ஓமத்தை அரைத்து வடிகட்டி, மாவில் கலக்க, வாசனையாக இருக்கும்.

*பாதுஷாவுக்கு மாவு பிசையும்போது மாவில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா, சூடு செய்த டால்டா இரண்டையும் கலந்து பிசைய வேண்டும். 1 கிலோ மைதாவுக்கு 350 கிராம் டால்டா போட, பாதுஷா உதிர் உதிராக வரும்.

*பாதுஷா கறுக்காமல் இருக்க பொரிக்கும் போதும் மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.

*கேசரியில் பைனாப்பிள் துண்டுகளை சர்க்கரை சேர்ப்பதற்கு முன் சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்தபின் பைனாப்பிளை போட்டால் வேகாது.

*எண்ணெய் இளங்காய்ச்சலில் இருக்கும்போது முறுக்கை போட்டு அரை வேக்காடாக எடுத்துவிட்டு, பின் முறுக்கை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் முறுக்கு கரகரப்பாக இருக்கும்.

*பட்சணத்திற்கு முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் வறுக்கும்போது கருகி விடாமல் இருக்க முந்திரிபருப்பை தண்ணீரில் ஊறப்போட்டு நெய்யில் பொரிக்க பதமாக இருக்கும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

*ரவா லட்டு செய்யும்போது ரவையுடன் அவலையும் மிக்ஸியில் ரவைபோல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இதனுடன் பால் பவுடரையும்

கலந்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

*சோமாஸி செய்யும்போது பூரணத்துடன் வறுத்துப் பொடித்த பாதாம், பிஸ்தா முந்திரியை சேர்த்து கலந்தால் சுவை கூடும்.

*அல்வா செய்யும்போது கடைசியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் அல்வா பளபளவென சூப்பர் சுவையாக இருக்கும்.

*தேன்குழலுக்கு மாவு பிசையும்போது தண்ணீர் விட்டு பிசையாமல் தேங்காய்ப்பால் சேர்த்து பிசைந்து சுட்டால் வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

*உளுந்து வடை நீர்த்து வடை தட்ட வரவில்லையா? அவல்தூள், ரவை, ரொட்டித் தூள், உளுந்து மாவு அல்லது அரிசி மாவு இதில் ஏதாவது ஒன்றை மாவுடன் கலந்து தட்டினால் வடை  மொறு மொறுப்பாக இருக்கும்.

*மிக்ஸர் செய்யும்போது  மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு கலப்போம். கொஞ்சம் மிளகுத்தூளும் கலந்து செய்தால் சுவையும், மணமும் அசத்தும்.

- வத்சலா மாரிமுத்து, சென்னை.

*தேங்காய் பர்பிக்கு சர்க்கரையைப் பொடித்து சேர்த்தால் மிருதுவாகவும், வெண்மையாகவும் வரும்.

*கேசரி, அல்வா, ஜிலேபி போன்றவற்றில் கலர் பவுடர் சேர்ப்பதற்குப்பதில் கேரட் சாறு கலந்தால் சுவை கூடும்.

உடம்புக்கும் நல்லது.

*மைசூர் பாகுக்கு கடலை மாவை சிறிது சூடான நெய்யில் கரைத்து பாகில் விட்டுக் கிளறினால் கட்டி தட்டாமல் பதமாக வரும்.

*ஓமம், வெல்லப்பொடி, சுக்குப்பொடி இவற்றை தலா ஒரு கப் கலந்து தேன் சேர்த்துப் பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு தீபாவளி பலகாரம் சாப்பிட்டபின், சாப்பிட்டால் மந்த நிலை வராது. ஜீரணமாகும்.

- எஸ்.ராஜம், திருச்சி.

*அதிரசத்துக்கான வெல்லப்பாகுடன் மாவைப் பிசையும்போது,சிறிது கெட்டித்தயிர் (புளிக்காத)சேர்த்தால் அதிரசம் பூப்போல் இருக்கும்.

*குலோப் ஜாமூன் மிக்சுடன் மைதா மாவு கலந்து பிசைந்தால் சுவை கூடும். அளவும் கூடும்.

*தேங்காய் பர்பி, முக்கால் பதம் ஆனதும், கெட்டியான தேங்காய்ப்பால் விட்டுக் கிளறினால், பர்பி மிருதுவாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.

- இல.வள்ளிமயில், மதுரை.

*வெல்லப்பாகு காய்ச்சும்போது ஒரு கரண்டி நெய்யில் பொடித்த வெல்லம் போட்டுக் கிளறினால் பாகு பதமாக வரும். சுவையும், மணமும் கூடும்.

*தீபாவளி இனிப்புப் பலகாரம் வைக்கும் தூக்குகள், சம்படங்களைச்சுற்றி, உப்புத்தூள், மஞ்சள் தூள் கலந்து தூவி வைத்தால் எறும்புகள் நெருங்காது.

*முறுக்கு, மிக்சர் வைக்கும் டப்பாவின் அடியில் பிளாட்டிங் பேப்பர் வைத்துவிட்டு,  பரப்பி, அதன்மேல் பலகாரங்கள் வைத்தால் அதிகப்படி எண்ணெயை அது உறிஞ்சிவிடும். மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

*ரவாலாடு செய்ய பாகு காய்ச்சும் போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பாகு முறுகாது. சுவை கூடும். வெண்மையாக இருக்கும்.

தொகுப்பு: ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.

Related Stories:

>