×

ஏர் ஹாரன் பயன்படுத்திய 163 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு: போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் மோட்டர் வாகன சட்டத்தை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்திய 163 வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கனரக வாகனங்கள், பேருந்துகளில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி, ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் சிறு வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறனர்.

எனவே, விதிகளை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் பைக், ஆட்டோக்கள், கார்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், மோட்டார் வாகன சட்டத்தை மீறி, அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் மீயூசிக்கல் ஹாரன்கள் பயன்படுத்தியதாக கனரக வாகனங்கள் உட்பட 163 வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டது. இதேபோல், ஆட்டோ, பைக், கார்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் பயன்படுத்திய 103 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், வாகனத்தில் குறைபாடுள்ள நம்மபர் பிளேட் பொருத்தி இயக்கிய 291 வாகனங்கள் மீதும் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Air , Case filed against 163 vehicles used by Air Horn: Police action
× RELATED தாம்பரம் விமானப்படை தளத்தில் 1,983...