மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராக வெங்கடேச பெருமாள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினரை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு உறுப்பினர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் பல வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஆணையத்திற்கு உறுப்பினரை நியமிக்க உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியது. இதையடுத்து மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் நீதித்துறை அல்லாத உறுப்பினராக ஆர்.வெங்கடேச பெருமாளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவர் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி திட்டங்களின் ஆலோசகராக பணியாற்றியவர். நியமனம் குறித்து வெங்கடேச பெருமாள் கூறும்போது, தயாரிப்புகள், சேவைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை பொதுமக்கள் அணுகலாம். கடைகள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள், காப்பீட்டு சேவைகள், மருத்துவமனை சேவைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆணையத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம் என்றார்.

Related Stories: