சேலம் மத்திய சிறையில் கைதியை தாக்கிய ரவுடிகள்: அதிகாரிகள் விசாரணை

சேலம்: சேலம் மத்திய சிறையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சிறை வார்டனை கோவையை சேர்ந்த குண்டாஸ் கைதிகள், பல் துலக்கும் பிரஷால் முதுகில் குத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். அவரை சக வார்டன்கள் காப்பாற்றினர். இதுகுறித்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை கைதும் செய்தனர். இதில், 10 பேர் கொண்ட கும்பல் தான், திட்டம் போட்டு வார்டனை தாக்கியது தெரியவந்தது. கும்பலின் தலைவர், கூட்டாளி என 2பேரை சிறை அதிகாரிகள் பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய சிறைக்கு மாற்றினர்.

மேலும் வார்டனை தாக்கிய 2 கைதிகள் இன்னும் இடமாறுதல் செய்யப்படவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் காலை, சிறைக்கைதியை ரவுடிகள் 3 பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடந்த கொலை வழக்கில் கைதான கார்த்தி, யுவராஜ், லெனின் ஆகிய 3 பேர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். லெனின் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் காலை, மற்றொரு கைதி தவறுதலாக லெனின் மீது இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லெனினின் கூட்டாளிகள், அந்த கைதியை பயங்கரமாக தாக்கினர். சிறை வார்டன்கள் அவரை மீட்டனர். தாக்கிய 3 பேரையும் தனி அறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: