ஊட்டி மலை ரயில் பாதையில் மழையால் திடீர் மண் சரிவு: உணவு, குடிநீரின்றி தவித்த சுற்றுலா பயணிகள்

குன்னூர்: நீலகிரி மலை ரயில் பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குடிநீர், உணவு இன்றி தவித்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் 208 வளைவு, 16 குகை, 250 பாலங்கள் வழியே இயற்கை அழகை கண்டு ரசிப்பதோடு இயற்கை காற்றுடன் மலர் மற்றும் மூலிகை வாசனையை நுகர்த்தவாறு 5 மணி நேரம் பயணித்து மகிழ்வது அவர்களுக்கு மறக்க முடியாத இனிய அனுபவமாக உள்ளது. நேற்று காலை 7.10  மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 170 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது.

குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்திருந்ததால் ரயில்வே டிராக்மேன் ஊழியர்கள் ரயில் பாதையை ஆய்வு செய்தனர். அப்போது ஹில்குரோவ்-ஆடர்லி இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை மற்றும் மரம் சரிந்து மண் குவியலாக கிடந்ததை பார்த்தனர். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஊட்டி நோக்கி வந்துகொண்டிருந்த மலை ரயில் ஓட்டுநரை தொடர்பு கொண்டு பேசினர்.

தண்டவாளத்தில மண் சரிவு ஏற்பட்டிருப்பதால் ரயிலை ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ராட்சத பாறை, கற்கள், மரம் உள்ளிட்டவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேரம் போராடி ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்தனர். அதன்பின்னர் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் மலை ரயில் புறப்பட்டு சென்றது. நடு வழியில் மலை ரயில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணித்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். உணவு, குடிநீரின்றி அவர்கள் அவதிப்பட்டனர்.

Related Stories: