4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: இந்து சமய அறநிலையம், தகவல் தொழில்நுட்ப துறை மானியக்கோரிக்கை விவாதம் தொடக்கம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 18ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடியது. அன்றைய தினம் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 6ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. கடைசியாக கடந்த  29ம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து 30ம் தேதி சனிக்கிழமை, மே 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 2ம் தேதி  பேரவை கூட்டம் இல்லை. 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்று தொடர்ந்து 4 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது.

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம்  தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். அதில் உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து இந்து சமய அறநிலையதுறை மற்றும் தகவல் ெதாழில்நுட்ப துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. தொடர்ந்து அமைச்சர்கள் முறையே பி.கே.சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலுரை அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். அதே நேரத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, 5ம் தேதி (நாளை) இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், போக்குவரத்து துறை, சுற்றுலா கலை மற்றும் பண்பாடு துறை மானியக்கோரிக்கையும், 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கையும், 7ம்  தேதி (சனிக்கிழமை) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் நடைபெற உள்ளது.

8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பேரவைக்கு விடுமுறை, 9ம் தேதி (திங்கள்) காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை),

10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காவல் (உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை), தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை) மீதான விவாதத்திற்கு முதல்வர் பதிலுரை அளிப்பார்.

அதன்பின், அரசினர் சட்ட முன்வடிவுகள்- ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்கள் நடைபெறும். பேரவை வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூடும்.

Related Stories: