சென்னை மின் வட்டத்தில் இணையவழி மின் கட்டணம் செலுத்துவது அதிகரிப்பு: மேலும் உயர்த்த வாரியம் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கான மின்இணைப்பு 2.20 கோடி, வணிக மின்இணைப்பு 35 லட்சம், தொழிற்சாலைகளுக்கான மின்இணைப்பு 7 லட்சம், விவசாயம் 21 லட்சம், குடிசைகள் 9 லட்சம் என மொத்தம் 3.16 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின்இணைப்புகளை பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுப்படுகிறது. உயர் அழுத்த பிரிவில் மாதந்தோறும் மின்சாரத்தின்  பயன்பாடு கணக்கீடு செய்யப்படுகிறது. பிறகு அந்த தொகை நுகர்வோரின் அட்டையில் குறித்து வைக்கப்படும். அதனை கொண்டு சம்பந்தப்பட்ட மாதத்திற்கான தொகையை நுகர்வோர்கள் செலுத்தி வருகின்றனர்.  

இவ்வாறு செலுத்துவோரில் பலர் ஆங்காங்குள்ள பிரிவு அலுவலகங்களில்  ஏற்படுத்தப்பட்டிருக்கும் மின்கட்டணம் செலுத்தும் மையம், நெட் சென்டர், மின் வாரியத்தின் செயலி, மின்வாரிய இணையதளம், வங்கி செயலிகள், இன்டர்நெட்  பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.  தாழ்வழுத்த மின்கட்டணத்தில் 49 சதவீதம் இணையவழியில் பெறப்படுகிறது. இவ்வாறு  நுகர்வோர் இணையவழியில் பரிவர்த்தனை மேற்கொள்வதை மேலும் அதிகரிக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: முதலில் நுகர்வோர் ஆங்காங்குள்ள மின்கட்டணம் செலுத்தும் மையங்களுக்கு நேரடியாக சென்று தான் மின்கட்டணத்தை செலுத்தி வந்தனர். இதனால் நேரம் கூடுதலாக செலவானது. எனவே இணையவழியில் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக மின்சார வாரியம் இணையவழி வங்கி பரிவர்த்தனை மூலமாக தாழ்வழுத்த மின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறையை கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கியது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் இணையவழி கட்டண வசூல் நடைமுறைக்கு வந்தது. முதலில் குறைவான நுகர்வோரே இணையவழியில் மின்கட்டணம் செலுத்தி வந்தனர். பிறகு இணையவழியில் கட்டணம் செலுத்த பலரும்  ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக இச்சேவையானது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் வங்கி, யுபிஐ, க்யூஆர் குறியீடு, இ-சேவை மையம், தபால் வங்கி அலுவலக மையங்கள், ஏடிஎம் என விரிவடைந்தது. தற்போதைய நிலவரப்படி இணைய வழிமுறைகளை பின்பற்றி 49 சதவீதம் பேர் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.  

தற்போது இணையவழியில் மின்கட்டணம் செலுத்துவதை அதிகரிக்க  தேவையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒருபகுதியாக  சமூக ஊடகங்கள், வசூல் மையங்களில் பதாகைகள் உள்ளிட்டவற்றின் மூலம்  நுகர்வோரிடையே சில மின் பகிர்மான வட்டங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. சென்னை தெற்கு, மதுரை மெட்ரோ, திருச்சி மெட்ரோ, சென்னை மேற்கு, திருப்பூர் வட்டங்கள் வசூலில் இணையவழி பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கான முயற்சியை  மேற்கொண்டதால் இணையவழி பரிவர்த்தனை அதிகரித்துள்ளன. குறிப்பாக, சென்னை  தெற்கு 2 பிரிவு அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மின்கட்டணம்  செலுத்துவோரின் சதவீதம் 37.62 என்ற நிலையில் இருந்து கடந்த மாதம்  62.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை மேலும் அதிகரிக்க  நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* இணையவழி பரிவர்த்தனை எவ்வளவு?

வட்டம்    பிப்ரவரி    மார்ச்

சென்னை தெற்கு (2)    37.62%    62.51%

மதுரை மெட்ரோ    34.83%    55.70%

திருச்சி மெட்ரோ    29.43%    47.09%

சென்னை மேற்கு    45.03%    57.15%

திருப்பூர்    43.25%    54.92%

* தற்போதைய நிலவரப்படி இணைய வழிமுறைகளை பின்பற்றி மின்கட்டணம் செலுத்துபவர்கள் 49 சதவீதம் பேர்

Related Stories: