×

பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: ஆட்சி கவிழ்ப்பா இடைக்கால அரசா? எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்; வென்று காட்டுங்கள் கோத்தபய சவால்

இலங்கை என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அலைகள் ஓசை தாலாட்டு பாட, ரம்மியமான கடலை சுற்றி அமைந்திருக்கும் தீவுதான் இலங்கை. இலங்கையின் ‘3டி’ டூரிசம், டெக்ஸ்டைல்ஸ், டீ தோட்ட தொழிற்சாலைதான் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தது. எந்த பிரச்னையும் இன்றி சீரான பொருளாதாரத்தை கொண்ட இலங்கை, கூடா நட்பால் இருந்ததையும் இழந்து நாட்டு மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. சீனாவுடன் ஏற்பட்ட நட்பால் அவர்களின் ராஜதந்திரத்தில் விழுந்து கடன் மேல் கடன் வாங்கி, அதை திருப்பி தர முடியாமல் அதற்கும் கடன் வாங்கி, இன்று நாட்டையே அடமானம் வைக்கும் நிலையில் உள்ளது.
 
சீனா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரூ.4.57 லட்சம் கோடி கடன், அந்நிய செலாவணி கையிருப்பு பெருமளவில் சரிவு, கொரோனா நெருக்கடியால் தொழில் முடக்கம் என பல காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை, பிரட், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல், காஸ், மருந்துகள் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் இல்லை... இல்லை.. இல்லை... பல மணி நேரம் மின்வெட்டு... பேப்பர், பத்திரிகைகள் அச்சிடும் தாள், மை உள்ளிட்டவை இல்லாததால் பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல பத்திரிகை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கோடீஸ்வரர்கள் கூட உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பசி கொடுமை, உயிருக்கு உத்தரவாதம் இல்லாதது போன்ற காரணங்களால் தமிழகம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இலங்கை மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ‘இலங்கை’ இன்று ‘இல்லாத கை’யாக மாறி உள்ளது. எதிரிக்கு கூட துரோகம் செய்யக்கூடாது என்று மனப்பான்மை கொண்ட இந்தியா, தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதுபோல் இதுவரை சுமார் ரூ.20,000 கோடிக்கு மேல் நிதி உதவி அளித்துள்ளது. இதுதவிர எரிபொருள் உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசு சார்பிலும் உதவிகளை அனுப்ப முன்வந்தது.

இதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, உதவிகளை அனுப்பும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். நாடு, நிர்கதியான நிலைக்கு செல்ல, சுமார் 90 ஆண்டுகளாக ஆண்டு வரும் ராஜபக்சே குடும்பத்தினர்தான். இதனால், கொதித்து எழுந்துள்ள இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கினர். அதிருப்தி எம்பிக்கள், கூட்டணி கட்சிகள் ஆதரவு வாபஸ் போன்ற காரணத்தால், 109 எம்பிக்கள் ஆதரவை மட்டுமே பெற்று பெரும்பான்மையை ராஜபக்சே இழந்தது.

இதையடுத்து, கடந்த மாதம் 5ம் தேதி பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது அமைச்சரவையை கூண்டோடு கலைத்தார். 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதில் ராஜபக்சே சகோதரரும் அடங்குவார். இதையடுத்து, அரசை தற்காலிகமாக வழிநடத்தவும், அவசர முடிவுகளை எடுக்கவும் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், கடந்த மாதம் 18ம் தேதி புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனால், கொந்தளித்த மக்கள் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்தா இருவரும் பதவி விலக கோரி தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு சுமார் ஒரு மாதமாக தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  

இந்த கூட்டத்தை கலைக்க கடந்த மாதம் 19ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டல் ஒருவர் பலியானார். இதன் பிறகு போராட்டம் மேலும் தீவிரமானது. மாணவர்கள், தொழிற்சங்கங்கள், புத்த துறவிகள் என நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வீதியில் இறங்கி ‘பதவியை விட்டு ஓடிவிடு’ என்று ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டம், பிரமாண்ட பேரணி நடத்தி வருகின்றனர். போராட்ட களத்தில் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் குவிக்கப்பட்ட போலீசாரை மக்களே விரட்டியடித்தனர்.

இதற்கிடையே, அனைத்து கட்சிகள் கொண்ட இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபயா ராஜபக்சே அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் பதவியில் அமர கூடாது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். இதை ஏற்க கோத்தபய மறுத்துவிட்டார். அதே நேரத்தில் ஏப்.30ம் தேதிக்குள் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகவில்லை என்றால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் 29ம் தேதி அனைத்துக்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், இடைக்கால அரசில் சகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு பதிலாக புதிய பிரதமரை நியமிக்க அதிபர் கோத்தபய ஒப்புக்கொண்டதாகவும், அமைச்சரவையை தேர்வு செய்வதற்கு தேசிய குழு அமைக்க ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், திடீரென கடந்த 30ம் தேதி, 225 எம்பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டுமாறும், பெரும்பான்மை இருக்கும் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்சே சவால் விட்டுள்ளர்.

இதை ஏற்றுள்ள இலங்கையின் எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சி தலைவர் லட்சுமண் கிரில்லா, ‘அடுத்த வாரம் (நாடாளுமன்றம் கூடும்போது) நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம். எப்படி என்று அந்த ரகசியத்தை இப்போது கூற முடியாது,’ என்று  தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கடந்த 30ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால், புதிய சபாநாயகரை தேர்தெடுப்பதற்காக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய சபாநாயகராக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, திலான் பெரேராவை பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் தங்களது பெரும்பான்மை உள்ளது என்று கூறி வரும் நிலையில், சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஏற்கனவே அறிவித்தபடி பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது. அதிபர் கோத்தபயாவும், எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று சவால் விட்டுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை அதிபர் கோத்தபயவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் வந்தால், அனைத்துக்கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க முன்வருவார் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், இடைக்கால அரசாக இருந்தாலும், புதிய அரசாக இருந்தாலும் எனது தலைமையில்தான் அமைய வேண்டும் என்று கோத்தபய கூறி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசு தோற்றாலோ அல்லது இடைக்கால அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டாலோ இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல், ஒரு மாதமாக போராடும் இலங்கை மக்களின் தலைவிதி யார் கையில் என்று தீர்மானிக்கும் நாள் என்பதால் உலக மக்களின் கவனமும் இலங்கை பக்கமும் திரும்பி உள்ளது. இதற்கிடையே, புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு நியமித்துள்ளது.

* ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?
1930ம் ஆண்டில் இருந்தே சுமார் 90 ஆண்டுகள் இலங்கையை குத்தகைக்கு எடுத்ததுபோல் அரசு பதவிகள், வர்த்தகம் என எல்லாவற்றிலும் கால் பதிக்காத இடமே இல்லை என்ற பெருமை ராஜபக்சே குடும்பத்தையே சாரும். இதுவரை டான் ஆல்வின், ஜெயந்தி, மகிந்தா, சந்திரா டியூடர், கோத்தபய, பசில், டட்லி, பிரீத்தி, காந்தாணி ஆகிய 9 ராஜபக்சேக்கள், இவர்களின் வாரிசுகள் ஆகியோர் அதிபர், பிரதமர், அமைச்சர்கள், அதிகாரமிக்க அரசு அதிகாரிகள் என பல்வேறு பதவியில் மாறி மாறி அமர்ந்து கடன்கார நாடாக மாற்றி உள்ளனர். மகிந்தா மற்றும் கோத்தபய ராஜபக்சே காலத்தில் மட்டும் அவரது குடும்பத்தினர் 11 பேர் அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்டோர் அரசு பதவி சுகத்தை அனுபவித்துள்ளனர். இதுதவிர, இலங்கையில் 70% வர்த்தகம் ராஜபக்சே குடும்பமே செய்து வருகிறது. இவ்வளவு சுகத்தை அனுபவித்ததால் ராஜபக்சே குடும்பத்தால் அரசு அதிகாரத்தை விட்டு வெளியே போக மனசு இல்லாமல் அவர்களின் பசிக்கு மக்களை இறையாக்கி வருகின்றனர்.

87 % பேர் பதவி விலக ஆதரவு
* கோத்தபயா அரசின் தவறான பொருளாதார கொள்கையே நாட்டின் தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம் என்று 62% மக்கள் தெரிவித்துள்ளனர்.
* 10ல் 9 பேர் பிரதமர் மகிந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்றும், 87% பேர் அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* 14.4% பேர் நாட்டில் ஊழல் அரசியல் கலாச்சாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
*  96% பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகள் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.  
* பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர நீண்ட காலமாகும் என 58% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

225 மொத்த உறுப்பினர்கள்
113 பெரும்பான்மைக்கு தேவையான இடம்

21வது சட்ட திருத்தம் மகிந்தா பிடிவாதம்
* இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டம் 2015 ஏப்ரலில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவினால் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
* பிரதமரை தனது விருப்பப்படி பதவி நீக்கம் செய்யும் அதிபரின் அதிகாரம் நீக்கப்பட்டது.
* இலங்கை அரசமைப்பின் 46 (2) மற்றும் 48வது ஷரத்துகளை திருத்துவதன் மூலம், பிரதமர் மரணம், ராஜினாமா அல்லது வேறுவிதமாக பதவியில் இருப்பதை நிறுத்தினால் அல்லது அரசாங்க கொள்கை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தால் மட்டுமே அமைச்சரவையை கலைக்க முடியும்.
* பிரதமரின் ஆலோசனையை கேட்டு அமைச்சரவையை கலைக்கும் அதிகாரத்தை அதிபர் கொண்டிருப்பதால் அதிபரின் அதிகாரத்தையும் அந்த திருத்தம் கட்டுப்படுத்தியது.
* அக்டோபர் 2020ல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
* 19வது திருத்தத்திற்கு (19A) மாற்றியமைக்கப்பட்ட 20வது திருத்தம் (20A) மீண்டும் அதிபருக்கு பல அதிகாரங்களை வழங்க வகை செய்தது.
* இரட்டைக் குடிமக்களுக்கு தேர்தல் உரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய ஷரத்து நிறைவேற்றப்பட்டது.
* தற்போது 21வது அரசியலமைப்பு திருத்தம் செய்ய வேண்டும் என்று மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
* இதன்மூலம் அதிபரிடம் இருக்கும் சில முக்கிய அதிகாரங்கள் நீக்கப்படும்.
* அதிபரின் கீழ் முப்படைகள் செயல்படுவார்கள். நிர்வாகம், அமைச்சரவை மட்டும் பிரதமருக்கு செல்லும்.
* இந்த சட்டத் திருத்தம் மூலம் அதிபரின் நிர்வாக ரீதியிலான அதிகாரங்களை நீக்கப்படுவதால் மக்களின் கோபம் கொஞ்சம் தணியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே எதிர்பார்க்கிறார்.

* குத்தகை இடத்தில் புதிய நகரத்தை உருவாக்கும் சீனா
உலகளவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார சந்தையாக கருதப்படுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் நட்பை வைக்க விரும்புகிறது. இது சீனாவின் கண்களை உறுத்தியதால், இலங்கையில் கால் பதித்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க திட்டமிட்டது. அதன்படி, சீனா கடந்த 2010-14ம் ஆண்டுகளில் இலங்கையில் தனது கால் தடத்தை வலுவாக பதித்தது என்றே சொல்லலாம். அப்போது, இலங்கைக்கு கடனை வாரி வாரி கொடுத்து கடனில் மூழ்க வைத்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட தொடங்கியது. கொழும்பில் சர்வதேச நிதி மையம் அமைத்தல், அம்பந்தொட்ட சிறப்பு பொருளதார மண்டல திட்டம் தொடர்பாக இலங்கை, சீனா இடையே 2015ம் ஆண்டில், 99 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அம்பந்தொட்ட துறைமுகத்தை கட்ட 178 ஹெக்டர் நிலபரப்பளவை சீனாவுக்கு தாரை வார்த்த இலங்கை, அதனை நிர்வகிக்க சீன ஹார்பர் இன்ஜீனியரிங் கம்பெனி போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் உடன் 99 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, 3வது நபருக்கு மேலும் 99 ஆண்டுகள் இந்த நிலத்தை குத்தகைக்கு விடலாம். இந்த திட்டத்தை மையமாக வைத்து இலங்கையயே காலி செய்யும் எண்ணத்தில் சீனா ஒரு புதிய திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. கடல் பகுதியில் சிங்கப்பூரை போன்ற ஒரு நகரத்தை அமைத்து இலங்கையில் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை க்ளோஸ் செய்யும் எண்ணத்தில் முதற்கட்ட பணிகளையும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதை ஒன்றிய அரசு முறியடிக்குமா?

* ஓரணியில் சிங்களர்களும் தமிழர்களும்...
உள்நாட்டின் போரின் போது, தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே குடும்பத்தினரின் நடவடிக்கையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய சிங்களர்கள், இன்று அதே ராஜபக்சே குடும்பத்தினரே ஓடி போ என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தை அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க தமிழர்களுடன், சிங்களர்கள் கைக்கோர்த்து உள்ளனர். பல இடங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

* ஏழை குடும்பங்களுக்கு ரூ.3,000 -ரூ.7,500 நிதியுதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,500 வரை நிதியுதவைி வழங்கப்படும் என்று இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்காக 33 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களுக்கு மே முதல் ஜூலை வரை உலக வங்கி உதவியுடன் இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

* லட்சங்கள் கொடுத்து தமிழகம் வரும் மக்கள்
கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடே ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழர்கள் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக ராமேஸ்வரம் வழியாக தமிழகம் வர முயற்சிக்கின்றனர். ஆனால், இலங்கை கடற்படை அவர்களை தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையும் மீறி, குடும்ப குடும்பமாக லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து ராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை சுமார் 80 பேர் ராமேஸ்வரம் வந்துள்ளனர். அவர்களை இந்திய கடற்படை அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

Tags : Gotabhaya Challenge , Sri Lankan parliament convenes amid turmoil: coup d'etat? Opposition parties today passed a no-confidence motion; Win the Gotabhaya Challenge
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி