கோயம்பேட்டில் 5ம் தேதி சில்லரை விற்பனை கடைகள் இயங்கும்

சென்னை: வணிகர்கள் தினத்தன்று கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறி விற்பனை கடைகள், பூக்கடைகள் இயங்கும் என்று, காய்கறி மார்க்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரம் காய்கறி, பழம் மற்றும் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. இவை தவிர, 500 உணவுதானிய கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை (5ம் தேதி) வணிகர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அன்றைய தினம் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று, காய்கறி மார்க்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கக்கூடிய சில்லரை காய்கறி கடைகளும், பூ மார்க்கெட்டும் நாளை செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சிறு வியாபாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்கனவே தக்காளி விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வணிகர் தினத்தையொட்டி, நாளை அனைத்து கடைகளையும் மூடிவிட்டால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். மேலும், நாளை மறுநாள் (6ம்தேதி) முகூர்த்த நாள் என்பதால், அன்றைய தினம் பூக்களின் விற்பனை அதிகரிக்க கூடும். எனவே, நாளை காய்கறி சில்லரை கடைகளும், பூ மார்க்கெட்டும் வழக்கம்போல் செயல்படும்’’ என்றனர்.

Related Stories: