×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் திருநாள் நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பெருநாள் என்றால், இல்லாதவர்க்கு இயன்றதை அளிக்கும் ஈகை திருநாள் என்று இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரிய காஞ்சிபுரம் ஈத்கா பள்ளிவாசல், தேரடி கைரூல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், ஓரிக்கை மஜித் பள்ளிவாசல், சதக்கத்துல்லா கான் மஜித் பள்ளிவாசல், ரெட்டிபேட்டை ஹமீதியா மதரஸா பள்ளிவாசல், ஐதர்பேட்டை ஹைதர் ஷா பக்கீர் மஸ்ஜித் பள்ளிவாசல், ஷேக் பேட்டை இஸ்பந்தியர் மஸ்ஜித் பள்ளிவாசல், நசரத்பேட்டை ஷேக் முகமது அலி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல், ஏரிக்கரை மஸ்ஜித் தே காதிர் அல்லா பத், வாலாஜாபாத் அருகே ஏகனாம்பேட்டை மதினா மஸ்ஜித், வாலாஜாபாத் பெரிய மஸ்ஜித் என காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகை நடத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிளை சார்பில் பெருநாள் (ரம்ஜான்) திடல் தொழுகை ஒலிமுகம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் தொடரட்டும் இறையச்சம் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை, அறுசுவை உணவு  வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

செங்கல்பட்டு: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. அதில், புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியர்கள், தொழுகை முடிந்ததும், ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். முன்னதாக, ஈகை திருநாள் என்பதால் ஏழை, எளியவர்களுக்கு அரிசி, பருப்பு, கறி உள்பட உணவு பொருட்களை தானமாக வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள மக்கா பள்ளிவாசல், நத்தம் பகுதியில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதுபோல் மறைமலைநகர், அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், செய்யூர், கல்பாக்கம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

Tags : Kanchipuram ,Chengalpattu , Ramadan is celebrated in Kanchipuram and Chengalpattu districts
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்