×

அட்சய திருதியைக்கு நாடு முழுவதும் ரூ.15,000 கோடிக்கு நகைகள் விற்பனை: வர்த்தகர்கள் கூட்டமைப்பு தகவல்

மும்பை: அட்சய திருதியைக்கு நாடு முழுவதும் நேற்று ரூ.15,000 கோடிக்கு மேல் நகைகள் விற்கப்பட்டதாக, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால், அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் அரோரா ஆகியோர் தெரிவித்தனர். அட்சய திருதியை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அட்சயா என்ற சொல்லுக்கு எப்போதும் குறையாது என்று பொருள் கூறப்படுகிறது. இந்த நாள், வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் நாளாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு மனைகள், நவரத்தின கற்கள் போன்றவற்றை வாங்குவது, முதலீடு செய்வது சிறப்பு என்று மக்கள் கருதுகின்றனர். சிலர், அட்சய திருதியை நாளில் வாகனங்கள் வாங்குவதும் உண்டு.

 அட்சய திருதியை நாளான நேற்று, நாடு முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து நகை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். சிலர் ஒரு கிராம் காசாவது வாங்கிச் சென்றனர். சிலர் நகைச்சீட்டு திட்டத்தில் சேர்ந்து, நகை வாங்குவதற்கான முதல் படியை நேற்று எடுத்து வைத்தனர். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது, புதிய பொருட்கள் வாங்குவது சிறப்பு என்றாலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நகைகளை வாங்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

நகைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டபோதும், ஆன்லைனில் முதலீடு செய்யலாம் என்று அறிவித்திருந்த போதும் மக்கள் பெரிய அளவில் நகை வாங்காததற்கு அவர்களின் நிதி நிலைமையும் காரணமாக அமைந்தது. கொரோனா ஊரடங்கால் பலரது வேலை வாய்ப்பு பறிபோனதால் நகை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கியுள்ளன. வேலை வாய்ப்பும் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு நகை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நகை வியாபாரிகள் கருதினர். நாடு முழுவதும் சுமார் 25 முதல் 30 டன் தங்கம் விற்பனையாகலாம் என எதிர்பார்ப்பதாக, அகில இந்திய நவரத்தினம் மற்றும் ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவர் சியாம் மெஹ்ரா தெரிவித்திருந்தார். அவர்  நேற்று கூறுகையில், ‘‘காலையில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் நகை வாங்க வருகின்றனர். கடந்த சுமார் 15 நாட்களாகவே, அட்சய திருதியைக்கு நகை வாங்க பலர் முன்பதிவு செய்தனர். இதனால், இந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனை 25 டன் முதல் 30 டன்களை  எட்டலாம்’ என எதிர்பார்க்கிறோம். என்றார்.

நேற்றைய நகை விற்பனை குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால், அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் அரோரா ஆகியோர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டாக அட்சய திருதியைக்கு நகை விற்பனை பெரிய அளவில் இல்லை. கடந்த 2019ம் ஆண்டு அட்சய திருதியை அன்று நாடு முழுவதும் ரூ.10,000 கோடிக்கு தங்கம் விற்பனையானது. 2020ம் ஆண்டு அட்சய திருதியையில் ஊரடங்கால் வெறும் ரூ.500 கோடிக்கு மட்டுமே விற்பனையானது. அதாவது, முந்தைய ஆண்டு விற்பனையில் இது 5 சதவீதம்தான்.

ஆனால், இந்த ஆண்டு, அட்சய திருதியை தினமான நேற்று, நகைகள் வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். வெள்ளி நகைகளையும் ஆர்வத்துடன் வாங்கினர். குறைந்த எடை தங்க நகைகளுக்கு அதிக கிராக்கி காணப்பட்டது. இவற்றின் விற்பனை மிக அதிகமாகவே இருந்தது. நாடு முழுவதும் நேற்று ரூ.15,000 கோடி மதிப்பிலான நகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்துள்ளோம். 2 ஆண்டாக தொய்வு காணப்பட்ட நிலையில், நேற்றைய நகை விற்பனை வியாபாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* தங்கக்கட்டிகளில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பி.சி.பாட்டியா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 39.3 டன் தங்கம், தங்கக்காசு மற்றும் தங்கக்கட்டிகளாக இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இது 41.3 டன்களாக உயர்ந்துள்ளது. இதுபோல், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 126.5 டன் அளவிலான தங்க நகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த  ஆண்டு இது 94.2 டன்களாக குறைந்துள்ளது. இது, மக்கள் தங்கக் கட்டிகள் மற்றும் காசுகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுவதை குறிப்பிடுவதாக உள்ளது’’, என்றார்.

Tags : Atsaya Tiruthi ,Traders' Federation , Rs 15,000 crore worth of jewelery sold to Atsaya Tiruthi across the country: Traders' Federation
× RELATED அமிதாப் பச்சன், பிளிப்கார்ட் மீது...