×

அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’ பொருத்திய வாகனங்களுக்கு ரூ.44,500 அபராதம்; தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி

தாம்பரம்: சென்னை புறநகர் சாலைகளில் செல்லும் லாரி, அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி ஏற்படுத்தும் வகையில், ‘ஏர் ஹாரன்’ பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலியால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையோரம் அமைந்துள்ள மருத்துவமனை ஊழியர்களும், அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் கஷ்டப்படுகின்றனர். சிலர் ஏர் ஹாரனால் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என போக்குவரத்து துறைக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி கனரக வாகனங்களை ஆய்வு செய்து அதில் பொருத்தப்பட்டிருக்கும் ‘ஏர் ஹாரனை’ பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்னை தெற்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடி அருகே தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், போக்குவரத்து மோட்டார் வாகன நிலை 2 ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிக ஒலி எழுப்பும் வகையில் ‘ஏர் ஹாரன்’ பொருத்தி வந்த 4 கனரக வாகனங்களை மடக்கி ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து, 44,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்று தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும் எனவும், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கனரக வாகனங்களில் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருந்தால் பறிமுதல் செய்வதோடு வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்தார்.

Tags : Thambaram Local Transport Officer Action , Rs 44,500 fine for air horn fitted vehicles Tambaram Regional Transport Officer Action
× RELATED அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’...