புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் கடல் அலையில் சிக்கி பலியாவதை தடுக்க புதிய நடவடிக்கை

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் அடிக்கடி கடலில் மூழ்கி இறப்பதால், பலியை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய காவல் துறையும், சுற்றுலா துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. புதுச்சேரியில் பல அழகான கட்டிடங்கள், பிரெஞ்சு காலத்து நினைவு சின்னங்கள், இயற்கை வளங்கள் நிரம்பி கிடப்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர், ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களில் இருந்து ஐடி ஊழியர்கள் போன்ற வாலிபர்கள், இளம்பெண்கள் புதுச்சேரி வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் புதுச்சேரி கடலில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் குளிக்கும்போது ஆர்வ மிகுதியால் ஆழத்திற்கு சென்று எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி இறந்துவிடுகிறார்கள்.

இவ்வாறான பலிகள் தொடர்ந்து வருவதால் புதுச்சேரி சுற்றுலாத்துறையும், காவல் துறையும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுச்சேரி கடற்கரையில் தலைமை செயலகம், பழைய துறைமுகம், பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பகுதி ஆழமான பகுதி என்பதால், யாரும் குளிக்க வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே சிலர் குளித்து ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். இதனால் கடலில் குளிப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும், குளிக்கும்போது அலையில் சிக்குவோரை மீட்கும் வகையிலும் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரையில் நீச்சல் தெரிந்த வீரர்களை (லைப் கார்டு) தயார் நிலையில் வைத்திருந்தனர். அவர்கள் பல உயிர்களை காப்பாற்றினர்.

இருந்தபோதும் சிலர் அவர்களையும் மீறி கடலில் ஆழமான பகுதிக்கு சென்று பலியாகினர். இதனிடையே போதிய நிதி இல்லாத காரணத்தால் லைப் கார்டுகளை பணியில் வைக்க முடியாத நிலை உருவானது. இதனால் தற்போது மீண்டும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரிக்கு வருபவர்கள் கடலில் குளித்து பலியாவதை தடுக்க காவல்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

பலி எண்ணிக்கை தொடர்வதால் இரண்டு துறைகளும் இணைந்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தின. அதில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கடலில் குளித்து பலியாவதை தடுப்பதற்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி காலாப்பட்டு முதல் நல்லவாடு, பனித்திட்டு வரை ஆழமான கடல் பகுதிகளில் ஒரு புதிய எச்சரிக்கை பலகையை வைக்க உள்ளனர்.

அதில் ஆண்டு வாரியாக எத்தனை பேர் கடலில் மூழ்கி இறந்தனர் என்ற விபரத்தை குறிப்பிட உள்ளனர். இதற்கான விபரங்களை கடலோர காவல் துறை சேகரித்து வருகிறது. இந்த ஆண்டில் ( 5 மாதத்தில்) மட்டும் தலைமை செயலகம் எதிரில் 2 ேபரும், காந்தி சிலை அருகில் ஒருவரும் என 3 பேர் இறந்துள்ளனர். பாண்டி மெரினா பகுதியில் பேர் இறந்துள்ளனர். இதேபோல வீராம்பட்டினம், நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் இறந்துள்ளனர். இதை தடுக்கவே அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட உள்ளது. மேலும் புதுச்சேரி கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை செய்யும் வகையில் ஆடியோ ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Related Stories: