வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது தினமும் 50 கன அடி குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைப்பு

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறைந்து தினமும் 50 கன அடி அளவு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மாவட்டத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக இருக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஏரியின் பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் குறைந்த அளவே அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏரிக்கு கீழணை மூலம் வடவாறு வழியாக 50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வீராணம் ஏரிக்கு அந்த தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தற்போது வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் முழுமையாக தேக்கி அதன்பிறகு அனுப்பினால் நன்றாக இருக்கும். தற்போது ஏரியே முழுமையாக நிரம்பாதபோது சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது சரியானது அல்ல. சென்னை குடிநீருக்கு தண்ணீர் செல்வதால் விவசாய பணிகளை தொடர்ந்து செய்வதில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.

Related Stories: