கூடலூர் ஊசிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கூடலூர்  : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊட்டி சாலையில் 26வது மைல் பகுதியில் உள்ள ஊசிமலை சுற்றுலா தலத்தில் நேற்று முன்தினம் மே தினம் மற்றும் வார விடுமுறை காரணமாக ஏராளமான கேரள சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஊசிமலை காட்சி முனையில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு காட்சிகள், முதுமலை வனப்பகுதிகள், தவளைமலை உள்ளிட்ட மலைத்தொடர்களை கண்டு ரசிக்க முடியும். கோடைமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் பசுமையாக உள்ள வனப்பகுதிகள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அத்துடன் உயர்ந்து வளர்ந்த யூகாலிப்டஸ் மரகாடுகள் இடையே செல்லும் பிரதான சாலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். கேரளா, கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் ஊசிமலை காட்சியை காண தவறுவதில்லை.

இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நாளை முதல் மேலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: