சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை: செம்பாக்கம் ஊராட்சியில் பரபரப்பு

திருப்போரூர்:  செம்பாக்கம் ஊராட்சியில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி, இருளர் இனமக்கள், காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்ைத முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் ஊராட்சியின், சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 1 மாதமாக இங்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக இல்லை எனவும், அதனை சரி செய்ய வேண்டும் என தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வம், திருப்போரூர் நகர செயலாளர் நந்தகுமார், கிளை செயலாளர் பாட்சா தலைமையில் 50க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியி மக்கள், நேற்று திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து ஒன்றிய அலுவலக மேலாளர் பெருமாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைமன் ஜெரால்டு, பிரேமலதா, பூபதி ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய மோட்டார் பொருத்தி சுத்தமான குடிநீர் வழங்கப்படும். குழாயில் வரும் தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி, அதன் தன்மை குறித்து அறிக்கை பெறப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: