×

மரியுபோல் இரும்பு ஆலை பதுங்கு குழியில் அழுகிய நிலையில் குழந்தைகள் சடலம்: நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடங்கியது

ஜபோரிஜ்ஜியா: மரியுபோலின் இரும்பு ஆலை பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் 12வது படைப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். அங்கு சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது, உக்ரைனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. துறைமுக நகரமான மரியுபோலை சமீபத்தில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், அங்குள்ள மிகப்பெரிய இரும்பு ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் படையினர் வசம் உள்ளது. அங்கு 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கி உள்ளனர். மரியுபோல் நகரம் போரில் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், இரும்பு ஆலையில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று தொடங்கியது. ரஷ்ய படையின் குண்டுவீச்சில் தரைமட்டமாகி கிடக்கும் இரும்பு ஆலையில் பதுங்கி குழிகளில் இருந்து மக்கள் சிலர் நேற்று மீட்கப்பட்டனர். 46 பேரை ரஷ்ய ராணுவம் வெளியேற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் ராணுவத்தின் 12வதுபடைப்பிரிவு தலைவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``ஆக்கிரமிப்பில் உள்ள இரும்பு ஆலைக்குள் நூற்றுக்கணக்கான குழந்தைகள், மக்கள் சிக்கி தவிக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் கிடக்கின்றன. பதுங்கு குழியில் உள்ளவர்களை வெளியேற்ற மேலும் சில நாட்கள் கூடுதலாக தேவைப்படும்,’’ என தெரிவித்தார்.

ஐநா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சாவியானோ அப்ரூ, ``இரண்டு மாதங்களுக்கு மேலாக மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கி தவித்த மக்கள் சிறிது சிறிதாக மீட்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு உளவியல் சோதனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும்,’’ என தெரிவித்தார்.

இதற்கிடையே ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகளை செய்து வருகின்றன. சர்வதேச நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக, அந்நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு நேரில் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்ற அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட பின், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க எம்பி.க்கள் சிலரும் உடனிருந்தனர். அப்போது சுதந்திரத்துக்கான உக்ரைன் போரில் அமெரிக்கா உறுதியாக துணை நிற்கும் என்று பெலோசி உறுதி அளித்தார்.

2 ரஷ்ய ரோந்து படகு அழிப்பு: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `கருங்கடல் பகுதியில் பாம்பு தீவு அருகே ரஷ்யாவின் 2 ராப்டார் ரோந்து படகுகளை துருக்கியிடம் இருந்து வாங்கிய ராணுவ டிரோன்களின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் குண்டுவீசி அழித்தது,’’ என கூறப்பட்டுள்ளது. எந்திர துப்பாக்கி, வேவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டட இந்த வகை படகுகளில் ஒரே நேரத்தில் 3 முதல் 20 வீரர்கள் வரை பயணிக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

புதிய தடைக்கு ஆலோசனை: ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், ஐரோப்பிய கூட்டணி நாடுகளான பல்கேரியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா காஸ் வினியோகத்தை நிறுத்தியது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது பற்றியும் ஆலோசனை நடந்தது. இந்த புதிய பொருளாதார தடைகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Tags : Mariupol , Children's corpse decomposes in Mariupol iron plant bunker: Rescue operation begins over 100
× RELATED 15வது நாளாக தொடர்ந்த ரஷ்யாவின்...