பீகாரில் இருந்து அரசியல் பயணம் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி?: மக்களை சந்திக்கும் நேரம் வந்து விட்டதாக பேட்டி

புதுடெல்லி: ‘மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்’ என்ற பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு  தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ்  கட்சி தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி  வந்தார்.  வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலை எவ்வாறு  எதிர்கொள்வது என்பது குறித்து சோனியாவுடன் ஆலோசித்து வந்தார். இதற்காக பிரசாந்த்  கிஷோர் பல முறை சோனியாவை சந்தித்து பேசினார். இதனால் பிரசாந்த் கிஷோர்  காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ்  விடுத்த  அழைப்பை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் நேற்றைய டிவிட்டர் பதிவை தொடர்ந்து, அவர் புதிய கட்சி தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

அவரது டிவிட்டர்  பதிவில், ‘ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர் கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. நான் எனது பக்கத்தைத் திருப்புகிறேன். உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்ல வேண்டிய நேரம் இது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்னைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது’ என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பிரஷாந்த் கிஷோர் புதிய கட்சித் தொடங்க உள்ளார் எனவும், பீகார் மாநிலத்தில் இருந்துதான் அவரது அரசியல் பயணம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: