×

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழககில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான அனைத்து மனுக்களையும் முடித்து வைத்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016-2020ம் ஆண்டுகளில் மட்டும் ரூ.58 கோடி எஸ்.பி.வேலுமணி மோசடி செய்துள்ளார் என தமிழக அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது. அதனால் இவ்வழக்கின் அறிக்கை விவரங்களை வழங்க வேண்டும். குறிப்பாக முதல் கட்ட அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி எந்த தவறும் செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார் மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர், ‘‘டெண்டர் வழங்கிய விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான அனைத்தும் முகாந்திரமும் உள்ளது. சி.ஏ.ஜி அறிக்கையும் கூட அதனை உறுதி செய்துள்ளது. அதனால் தான் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையும் விரைவில் தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என தெரிவித்தனர். இதனையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,SB Velumani , Adjournment of judgment in the Supreme Court in the tender malpractice case against SB Velumani
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...