×

வட மாநிலங்களில் வெயில் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில்  மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் 113  டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தாண்டிய நிலையில், பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிக வெயில் காரணமாக ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் வெப்பம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா, ஒடிசா, சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட் மற்றும் உபி மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக் காற்று மே 15 ம் தேதி முதல் வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர் பி.கே.பிஸ்ரா, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  மகாராஷ்டிராவில் முன் எப்போதும் இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. விதர்பா, மராத்வாடா பிராந்தியங்களில்  வெப்ப நிலை 104 முதல் 114 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி உள்ளது. வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் வெப்ப பக்கவாதம் போன்ற காரணங்களால் மாநிலத்தில் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.

Tags : Weil Impact Decreases In Northern States: Meteorological Center Information
× RELATED போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் அதிர்ச்சி தகவல்