இலங்கை வவுனியாவிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கை வவுனியாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அங்கிருந்து பலரும் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இலங்கை வவுனியா மாவட்டம் கற்குளம் பகுதியில் வசித்து வந்த ராஜலட்சுமி(56), இவரது மகன் தயாளன்(27), இவரது மனைவி லதா(26) மற்றும் குழந்தைகள் தன்ஷிகா(6), தக்சரா(2) ஆகியோர் நேற்று அதிகாலை படகு மூலம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர். மரைன் போலீசார், 5 பேரையும் ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர். தயாளன் கூறுகையில், ‘‘கூலி வேலை செய்து வந்தேன். பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கி விட்டன.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலை ஏதும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த நகைகள் மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்று, எப்படியோ சமாளித்து, குடும்பத்தை நடத்தி வந்தேன். வருமானத்திற்கு வேறு வழியில்லாததால், தமிழகத்திற்கு குடும்பத்தினரை அழைத்து வந்து விட்டேன். வவுனியாவில் இருந்து பேருந்து மூலம் தலைமன்னாருக்கு வந்தோம். அங்கு படகு கட்டணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்து, இரவு 10 மணிக்கு புறப்பட்டோம். அதிகாலை ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் எங்களை இறக்கி விட்டு, அந்த படகு சென்று விட்டது’’ என்றார். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை, 80 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: