கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாஜி அதிமுக எம்எல்ஏ உதவியாளரிடம் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முக்கிய உதவியாளர் பூங்குன்றனிடம்  2 நாட்களாக தனிப்படை போலீசார் 16 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு  முக்கிய தகவல்களை போலீசார் சேகரித்தனர். இந்நிலையில், நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிமுக முன்னாள்  எம்எல்ஏ ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் 2வது முறையாக  விசாரணை நடத்தப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சில நாட்களில்  சேலம் ஆத்தூரில் நடந்த விபத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ்  இறந்தார். கனகராஜூக்கும், நாராயணசாமிக்கும் நட்பு இருந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் பூங்குன்றன் அளித்த வாக்குமூலத்தில் கோவையை சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகள் பெயரை கூறியிருப்பதாக  தெரிகிறது. கொடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் தொடர்பாக  பூங்குன்றன் பல்வேறு திடுக்கிடும் விஷயங்களை கூறியிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. நாராயணசாமிக்கு கார் டிரைவர் கனகராஜிடம் பழக்கம்  ஏற்பட்ட பின்னர் அவர் தான் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் அறிமுகம்  செய்துள்ளார். அதற்கு பிறகு அவரிடம் ஒரு ஆண்டிற்கு மேலாக கார் டிரைவராக  கனகராஜ் வேலை செய்திருப்பதாக தெரிகிறது.

முன்னாள் முதல்வரிடம் கார்  டிரைவராக இருந்தவர், எம்எல்ஏவிற்கு கார் ஓட்ட சென்றது பல்வேறு  சந்தேகங்களை போலீசாருக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசாரிக்கப்பட்டவர்கள்  அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அதிமுகவின் முக்கிய  பிரமுகர்களை அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த விசாரணையில் கொடநாடு பங்களா  நில பத்திரங்கள், ஆவணங்கள், கொள்ளையின் பின்னணியில் உள்ள தகவல்கள்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்-கத்திக்குத்து: கோவை மருதமலை ரோட்டில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் சிலர் அடிக்கடி  மோதலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. சினிமா பாணியில் இவர்கள் கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். சமீபத்தில் 17 வயது மாணவர் ஒருவர் வடவள்ளி பகுதியை  சேர்ந்த 16 வயது மாணவருடன் தகராறில் ஈடுபட்டார். தான் படித்து வந்த பள்ளியில்  இருந்து வேறு பள்ளிக்கு செல்ல நீ தான் காரணம் எனக்கூறி அவரிடம் வாக்குவாதம்  செய்தார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் யார் பெரியவர்? என  மோதி பார்த்து முடிவு செய்ய திட்டமிட்டனர். பள்ளி வளாகத்தில் மறைவான  இடத்தில் இதற்காக சினிமா பாணியில் ‘‘சிங்கில்ஸ் பைட்’’ நடத்த முடிவு  செய்தனர். அதன்படி 17 வயது மாணவரும், 16 வயது மாணவரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. அந்த மோதலை சில  மாணவர்கள் வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். அப்போது 16 வயது மாணவரின்  அண்ணன் உதயகுமார் (21) என்பவர் அங்கே வந்தார். அவர் மோதலை தடுக்க முயன்றார். அப்போது 17 வயது மாணவர், ‘‘நான் உன் தம்பியுடன் மோதுவதை தடுக்காதே’’ எனக்கூறி அவரை  கத்தியால் குத்தினார். இதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து  கத்தியால் குத்திய மாணவரை கைது செய்தனர்.

சேலத்தில் 2 ஆண்டுகளாக சீரழித்த கொடூரம் 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்- தாயின் கள்ளக்காதலன் கைது: சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி, கோவையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து, 10ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஒரு மில்லில் பகுதி நேரமாக வேலை பார்த்தும் வந்துள்ளார். இச்சிறுமியை நேற்று முன்தினம், அவரது அத்தை சேலத்திற்கு அழைத்து வந்திருந்தார். அப்போது, இனி வீட்டில் தாயுடன் தங்கியிருந்து படிக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அச்சிறுமி, நான் அம்மாவுடன் இருக்க மாட்டேன்.

அந்த வீட்டிற்கு என்னை அனுப்பாதீர்கள் எனக்கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘எனது தந்தை 8 ஆண்டுக்கு முன்பு  இறந்த பிறகு, அதே பகுதியை சேர்ந்த வெள்ளித்தொழிலாளி மணிமாறன் என்பவருடன் என்னுடைய தாய் தொடர்பு வைத்துக்கொண்டார். இதனால், வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்ற மணிமாறன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டார். அதன் பிறகு அடிக்கடி என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். அதை எனது தாயிடம் கூறிய போது, அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். அதனால், அங்கு செல்ல மாட்டேன்,’’ எனக்கூறி கதறி அழுதுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அத்தை, சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, நேற்று காலை தாயின் கள்ளக்காதலனான மணிமாறனை(31) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related Stories: