அதிகாரிகள் திடீர் ஆய்வில் அம்பலம்; நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: 22 ஊழியர்கள் டிஸ்மிஸ்: திருவண்ணாமலை கலெக்டர் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக, 22 ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 63 இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது.இங்கு அதிகாரிகளின் உடந்தையுடன் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் நெல் விற்பதை தடுக்க, ஆன்லைன் பதிவு, சாகுபடி சான்று என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்தன.

நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, வேட்டவலம் அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இதைதொடர்ந்து, மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வு நடத்த கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஒரு வாரமாக 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு நடத்தியது. விற்பனைக்கு நெல் கொண்டுவந்தவர்களின் ஆவணங்கள், பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விளைந்ததைவிட, அதிக அளவில் நெல் கொள்முதல் செய்திருப்பதும் தெரியவந்தது. எனவே, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்த நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று வியாபாரிகள் கூடுதல் லாபம் அடைந்திருப்பதும், அதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உடந்தையாக இருந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்டறியப்பட்ட விதிமீறல்கள், முறைகேடுகள் தொடர்பாக அங்கு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 22 பட்டியல் எழுத்தர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தவறான முறையில் பயன்படுத்த முயற்சிக்கும் நபர்கள், விவசாயிகள் அல்லாத நபர்கள் மீது வழக்குப்பதிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட பணியாளர்களை நிரந்தர பணி நீக்கம் செய்வதுடன், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Related Stories: