சரக்கா சபதம் உறுதிமொழி விவகாரம் மருத்துவக்கல்லூரி டீன் உள்நோக்கத்துடன் செயல்பட்டாரா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு டாக்டர்கள் சங்கம் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் கே.செந்தில், பொதுச்செயலாளர் என்.ரவிசங்கர் ஆகியோர் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் “சரக்கா சபதம்” எனும் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்த உடனே, அந்த உறுதிமொழியை முழுவதுமாக எதிர்த்தது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் “ஹிப்போகிரிடீஸ்” உறுதிமொழியை இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடை விருப்பம் ஆகும்.

கடந்த பிப்ரவரி 7 ம் தேதி தேசிய மருத்துவ ஆணைய எம்பிபிஎஸ் சேர்க்கை குறித்த ஆன்லைன் கூட்டத்தில், அதன் தலைவர் அருணா வணிகர், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘ஒயிட் கோட் அணியும் விழா’ என்பதை இந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்த வேண்டும். அந்த விழாவில் சரக்கா சபதம் உறுதிமொழியை அனைத்து மாணவர்களும் பிரமாணம் செய்ய வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து மார்ச்  31 ம் தேதி தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் வழங்கப்பட்டது. அதுபோலவே, கடந்த மாதம் 30 ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ‘ஒயிட் கோட் அணியும் விழா’ நடைபெற்றது. தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி இருந்த சரக்கா சபதம் உறுதிமொழியை ஆங்கிலத்தில் மருத்துவ மாணவர்கள் எடுத்தனர், இந்த விழாவில் சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் பயன்படுத்தி எவ்வித உறுதிமொழியோ அல்லது பேச்சுகளோ நடைபெறவில்லை.

‘ஒயிட் கோட் அணியும் விழா’ குறித்து தமிழக அரசோ அல்லது மருத்துவக் கல்வி இயக்குநரோ எவ்வித ஆணையும் வழங்காத நிலையில், சில இடங்களில் ஹிப்போகிரடீஸ் உறுதிமொழியும், சில இடங்களில் சரக்கா சபதம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதுபோல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் சரக்கா சபதம் உறுதிமொழியை ஆங்கிலத்தில் எடுத்தனர். இதில், கல்லூரி டீன் மற்றும் பிற அலுவலர்கள் எவ்வித உள்நோக்கத்துடன் செயல்படவில்லை. அதனால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டீன் (முதல்வர்) ரத்தினவேலுவை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியமர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: