×

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா? பணத்தை வாரி வழங்குவதால் கட்சித்தலைமை விசாரணை

சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை உறுப்பினர் என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஓ.பி.ஜெயபிரதீப், ஆன்மீக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்தநிலையில் திடீரென கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் உள்ள பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக அனைத்து சமூதாயத்திலும் உள்ள கோயில் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அவரது வருகையால் அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கின்றனர். விளம்பரங்களும் செய்கின்றனர். இதனால், கட்சிக்குள் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளிடையே புகைச்சலையும் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் புகார் செய்யப்பட்டுள்ளன.

கட்சித் தலைமையும் இந்தப் புகாரை சீரியசாகவே எடுத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் தனது மூத்த மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து வந்ததால், யாருக்குமே மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்தநிலையில், 2வது மகனையும் அரசியலில் இறக்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், ஜெயபிரதீப், தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், இரு தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பற்றியும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் கட்சித் தலைமையிடம் புகார் செய்யப்பட்டது. விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் தெரிவித்துள்ளேன். நான் கலந்து கொண்டது கட்சி நிகழ்ச்சி இல்லை. தனிப்பட்ட நிகழ்ச்சி. இந்த விழாவுக்கு நான் வரும்போது விழா கமிட்டி நபர்களிடம் ஆடம்பரமான வரவேற்பு எனக்கு வழங்க வேண்டாம் என்று சொன்னேன். கட்சி நிர்வாகிகளிடமும் யாரும் வரவேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நான் வருவதை அறிந்து என்னுடைய நண்பர்கள், சிலர் அன்பின் காரணமாக புகைப்படத்தை வெளியிட்டு, சால்வை, மாலை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த உலகத்தில் பெயர், புகழ், செல்வாக்கு பெறுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. எனது சுய நலத்திற்காக எனது நண்பர்களை ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது. இனியும் பயன்படுத்த மாட்டேன். நான் அரசியல்வாதியாக உங்களுக்கு பயன்படுவேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல நண்பனாக, உற்ற துணையாக செயல்படுவேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். தற்போது கட்சித் தலைமை விசாரணை நடத்துவதால் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தாலும், மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து பூடகமாக கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதியாக நான் உங்களுக்கு பயன்படுவேனா என்று எனக்கு தெரியாது.

Tags : OPS ,Thiruvananthapuram , Did OPS 'youngest son compete in the Thiruvananthapuram constituency to participate in the following shows? Party leadership probe into money laundering
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி