மே தினத்தில் விதிமீறி செயல்பட்ட 302 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் அதிரடி

சென்னை:  மே தினத்தில் விதிமீறி செயல்பட்ட 302 நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் நிறுவனங்களில், தொழிலாளர் தினமான மே 1ம் தேதி பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு (தொழிலாளர் சம்மதத்துடன்), தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களின் கீழ், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

இதை மீறி செயல்படும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசின் முதன்மை செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, சென்னை தொழிலாளர் இணை ஆணையர்-1 மாதவன்  ஆகியோரது உத்தரவின் பேரில், சென்னை 1, 2 மற்றும் 3ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) தலைமையிலான தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், சென்னையில் மொத்தம் 434 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொண்டனர். இதில், 302 நிறுவனங்கள் விதி மீறி செயல்படுவது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி, மேல் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது என்ற விவரத்தினை சென்னை 2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: