நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் 15 வரை நீட்டிப்பு

சென்னை: ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் மாணவியரை சேர்ப்பதற்கு வசதியாக, நீட் என்னும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 15 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான நீட் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் மே 15ம் தேதி தங்கள்  விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் தேசிய தேர்வு  முகமை அறிவித்துள்ளது.

 இதுகுறித்து, தேசிய தேர்வு முகமையின் தேர்வுத்துறையின் மூத்த இயக்குனர் சாதனா பிரஷார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளில் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டைய தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் தேதி அறிவிக்கப்பட்டு மாணவ, மாணவியர் தற்போது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவப் பணிக்கான ஆயுதப்படையின் இயக்குனர் தலைவர் சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் பெண்களை 6 கல்லூரிகளில் சேர்க்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

 அதன்படி, புனே, கொல்கத்தா, மும்பை, டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் உள்ள 220 இடங்களில் மாணவியரை சேர்க்க வாய்ப்பு அளிக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மேற்கண்ட நர்சிங் மாணவியரும் மே 15ம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் மே 15ம் தேதி இரவு 11.50 மணி வரை தங்களுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர்  www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுதவிர 011-40759000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: