×

கொரோனாவால் கற்றல், உடல்-மன நலனில் ஏற்பட்ட இடைவெளியை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்-மன நலனில் ஏற்பட்ட இடைவெளியால் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு வகுப்பறை சூழலை உருவாக்கி வருகின்றனர். மேலும் மாணவர்களின் மனநலன் மேம்பட மாணவர்களோடு தொடர்ந்து உரையாடுவதில் உள்ள சிரமங்களையும் அரசு உணர்ந்துள்ளது. இந்த சிக்கல்களை களைய அரசு பின்வரும் நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

* மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மைக் குழுவின் துணையுடன் நடத்தப்படும்.
* விடுமுறை நாட்களில் மலை சுற்றுலாத் தலங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். பள்ளிப் பாடங்கள் தவிர சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம், எதிர்காலவியல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
* கணினி நிரல் மன்றங்கள், எந்திரனியல் மன்றங்கள், ஏற்படுத்தப்படும். இணையப்பாதுகாப்பு மற்றும் நீதிநெறி பயிற்சி அளித்து மாநில அளவில் ஹேகத்தான் போட்டிகள் நடத்தப்படும்.
* பள்ளிகளில் காய்கறித் தோட்டம்  மாணவர்கள் மூலம் அமைக்கப்பட்டு அதில் விளையும் காய்கள் சத்துணவில் பயன்படுத்தப்படும்.
* மாணவர்களுக்கு சதுரங்க ஆர்வம் உருவாக்க  மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறுவோருக்கு சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்படும்.
* மணவர்களிடம் தலைமைப் பண்பு, நல்லொழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்க மண்டல, மாநில அளவில் சாரண, சாரணியர் முகாம்கள் நடத்தப்படும்.
* மன நல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு  பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில் தக்க நிபுணர்களை கொண்டு மன நல ஆலோசனை வழங்கப்படும்.

* தேன்சிட்டு, ஊஞ்சல் இதழ்
அமைச்சர் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, ‘‘3-5ம் வகுப்பு மாணவர்களுக்கு  ‘ஊஞ்சல்’ என்ற இதழும், 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் வெளியாக உள்ளன. ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழும் வெளிவர உள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் படைப்புகளை இந்த இதழ்களுக்கு அனுப்பலாம். அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ‘எங்கும் அறிவியல், யாவும் கணிதம்’ STEM எனப்படும் அறிவியல் தொழில் நுட்ப  பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona , Psychiatric counseling for school children to bridge the gap between learning and physical and mental well-being by Corona: Department of Education
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...