×

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர் அல்லாதோருக்கும் உதவும் அரசாக திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர்  இரா.ராஜிவ்காந்தி செய்திருந்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுக் கட்சியிலிருந்து இன்றைக்கு விலகி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் - இல்லை என்று சொன்னாலும், தமிழர்களுக்காக - தமிழ்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திமுக தான் நமக்கு விடிவெள்ளியாக-உற்ற தோழனாக - நம்மை காக்கும் ஒரு பேரியக்கமாக இருக்கிறது என்ற அந்த நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் உங்களை இணைத்துக்கொள்ள இங்கே வந்திருக்கிறீர்கள்.

திமுகவில் வந்து இன்று இணைந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், திமுகவின் வரலாறு என்பது 73 ஆண்டுகாலம். இன்னும் 2 வருடத்தில் 75-ஆம் ஆண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். ஐந்து முறை தலைவர் கலைஞர் தலைமையில் ஆட்சி நடத்தி, இப்போது 6-வது முறையாக உங்களில் ஒருவனாக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம். எதற்காக இதை வரிசைப்படுத்தி உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறேன் என்று சொன்னால், நாம் மக்களுக்கு போராட - வாதாட அந்தப் பணியை தொடர்ந்து நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டிய திமுக ஆட்சி, அந்த ஆட்சிக்கு அடித்தளமாக இருந்த கழகம், அந்தக் கழகத்தில் நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். எனவே உங்களையெல்லாம் நான் வரவேற்கிறேன். இப்படி எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். செம்மொழி என்கிற அந்த அந்தஸ்தைப் தலைவர் கலைஞர் பெற்றுத் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவர் தலைமையில் இயங்கிய நம்முடைய திமுகவில் நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இன்றைக்கு நம்முடைய ஆட்சி - திமுக ஆட்சி கலைஞர் வழிநின்று-அண்ணா வழிநின்று நம்முடைய ஆட்சி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது இலங்கையில் என்ன நிலை என்று உங்களுக்கு தெரியும்.
 
எனவே தான் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி அனுப்ப வேண்டும்-அந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும்-அவர்களுக்கு வேண்டிய முடிந்த அளவிற்கு நம்மாலான - உதவிகளை செய்யவேண்டும் என முடிவெடுத்து நான் நேரடியாக டெல்லிக்கு சென்றிருந்த போது பிரதமரை சந்தித்து சொல்லியிருக்கிறேன். அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த போதும் சொன்னேன். மேலும், அத்தனை கட்சிகளும் - எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக உட்பட எல்லாக் கட்சிகளும்-ஏன் பாஜ. உட்பட நாம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து, தீர்மானத்தை ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். நிறைவேற்றியவுடன், நேற்று முன்தினம் மாலையில் நமக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. தாராளமாக அனுப்புங்கள். நாங்கள் உதவி செய்ய காத்திருக்கிறோம். எங்கள் மூலமாக அனுப்பி வைக்கிறோம். ஒன்றிய அரசுக்கு அனுப்பி வையுங்கள் என்று அங்கிருந்து செய்தி வந்திருக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து - அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்று அந்த நிலையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும், அதற்குப்பிறகு 5 நாட்கள் கழித்து மே7-ஆம் தேதி தான் நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். பதவிப்பிரமாணம் செய்து கொண்டோம். அந்த ஏழாம் தேதி வரப்போகிறது. ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. 10 வருடம்-20 வருடம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ, அதை விடப் பலமடங்கு சாதனையை இந்த ஓராண்டு காலத்தில் நாம் செய்திருக்கிறோம். இவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். இன்னும் செய்யப்போகிறோம் என்று பேசினார். விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK government ,Tamils ,Chief Minister ,MK Stalin , The DMK government is there to help not only Tamils living across the sea but also non-Tamils: Chief Minister MK Stalin's speech
× RELATED விழுந்தயம்பலத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்