ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது: ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு

பெர்லின்: ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘ரஷ்யா - உக்ரைன் போரில் யாரும் வெற்றியாளர் ஆக முடியாது. நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்’ என பேசினார். நேட்டோ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அதே சமயம், இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. இந்த முக்கிய சூழலில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று அதிகாலை 1 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. ஜெர்மனி தலைநகர் பெர்லினை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டு தலைவர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெர்லினில் உள்ள பெடரல் சான்சலரியில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் இடையேயான சந்திப்பு நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனி அதிபராக ஓலாப் ஸ்கோல்ஸ் பதவியேற்ற பின் பிரதமர் மோடி அவரை சந்தித்து பேசுவது முதன்முறைஆகும். இதில் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், கலாச்சார இணைப்புகள் குறித்து  ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அளித்த பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘உக்ரைன் நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே, உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சையைத்  தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு. இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது.  ரஷ்யா - உக்ரைன் மோதலில் யாரும் வெற்றி பெற முடியாது. அனைவரும் இழப்பை  சந்திக்க நேரிடும் என்று நம்புகிறோம். போரால் எண்ணெய் விலை விண்ணை  முட்டுகிறது. உணவு தானியங்கள் மற்றும் உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு  உள்ளது.

இதன் விளைவு உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமை. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மோதலின் மனிதாபிமான விளைவுகள் குறித்து இந்தியாவும் கவலை கொண்டுள்ளது’’ என்றார். ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறுகையில், ‘‘உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ரஷ்யா ஐ.நா சாசனத்தை மீறியுள்ளது. ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். பின்னர், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு 6வது ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு பிரதமர் மோடியும், அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஜெர்மன் நாட்டு உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,  ‘வெளியுறவு மற்றும் பாதுகாப்பு, பொருளாதார, நிதிக் கொள்கை, அறிவியல் மற்றும் சமூக பரிமாற்றம், காலநிலை, சுற்றுச்சூழல்,  நிலையான வளர்ச்சி, ஆற்றல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ₹79,000 கோடியில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

* இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு வந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகாலை 4 மணி முதல் காத்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், மோடியை பார்த்ததும் ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிட்டனர். மோடியை வாழ்த்தி நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசுதோஷ் என்ற சிறுவன் மோடியிடம் தேசபக்திப் பாடலைப் பாடினார். சிறுவனின் பாடலில் உற்சாகமடைந்த மோடி, அவனை ஊக்கப்படுத்தி தலையை வருடி பாராட்டினார். இதேபோல், மன்யா மிஸ்ரா என்ற சிறுமி, பிரதமரின்  உருவப்படத்தை பரிசாக வழங்கினார். அதில், மோடி கையெழுதிட்டார். இருவரும்  மோடியை பார்த்ததும் இல்லாமல், அவரிடம் பாராட்டையும் பெற்றதால் உற்சாக  மகிழ்ச்சியில் திளைத்தனர்.

* உலக தலைவர்களுடன் இன்று சந்திப்பு

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனிலுக்கு சென்றார். அங்கு டென்மார்க் பிரதமர் பிரதமர் மெட்டே ப்ரெட்ரிக்சனை இன்று சந்தித்து பேசுகிறார். மேலும், அங்கு நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார். டென்மார்க் பயணத்தை முடித்து கொண்டு நாளை புறப்படும் மோடி, பிரான்ஸ் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார்.

Related Stories: