×

கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. தடுப்பூசி கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் முக்கிய அம்சமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. தொற்று பரவல் தீவிரமாக இருந்த போது, ஒன்றிய சுகாதாரத்துறையின் அறிவிப்புகளை பின்பற்றி,  தமிழகம், ஒடிசா, டெல்லி, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கின. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து முனையங்களில் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மாநிலங்கள் பிறப்பித்திருந்தன. மாநில அரசுகளின் இந்த உத்தரவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சட்டத்திற்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உட்பட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இதுகுறித்து ஒன்றிய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதத்தில், ‘‘கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. குறிப்பாக சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது மட்டுமில்லாமல், அவர்களது பெற்றோர்களும் தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்தப்படுகிறது. இது தனிமனித உரிமை மீறல் மட்டுமில்லாமல், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. மேலும் கொரோனாவுக்கு முக்கியம் தடுப்பூசி என்றால், அதனை செலுத்திக் கொண்ட பிறகும் மீண்டும் நோய் தொற்று வருவது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், ‘‘கொரோனா போன்ற பேரிடர்களை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் 100 சதவீத தடுப்பூசி மக்களுக்கு போடுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த பணியை தமிழக அரசு முழுமையாக செய்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடாதவர்களால் தான் கொரோனா உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனை  நிபுணர்களின் ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பட்டி, ‘‘நாடு முழுவதும் 96 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை கட்டாயமாக்க வேண்டாம் என்பது தான் ஒன்றிய அரசின் நிலைப்பாடாகவும் உள்ளது’’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. இதுகுறித்து அரசியல் சட்ட விதி 21 தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் தனிமனித தகவல்களை தவிர, கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான தரவுகள் வெளிப்படையாக ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும். இது நிபுணர்கள் சார்ந்த விவகாரம் என்பதால் அதற்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை. இதில் குறிப்பாக சர்வதேச தரத்திற்கு இணையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. தடுப்பூசி கட்டாயப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

* மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் பொது சுகாதாரத்தை காரணம் காட்டி சில கொள்கைகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஏனெனில் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை காக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

3,157 பேருக்கு தொற்று
* நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 3,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 82 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.
* கேரளா மாநிலத்தில் கொரோனாவினால் 21 பேர் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 869ஆக உள்ளது.
* நாடு முழுவதும் 19,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Supreme Court , Restrictions should be removed and vaccination should not be forced: Supreme Court orders action
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...