கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடி தடுப்பூசி; லக்கிம்பூர் கேரி அரசு மருத்துவமனையில் அவலம்

லக்கிம்பூர் கேரி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி அடுத்த நயபூர்வா கிராமத்தில் வசிக்கும் சிவம் ஜெய்ஸ்வால் (40) என்பவர், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக புல்பேஹர் சுகாதார மையத்திற்கு சென்றார். அவர், தனக்கு இரண்டாவது தடுப்பூசி போடுமாறு அங்கிருந்த சுகாதார துறை பணியாளர்களிடம் கேட்டார். அவர்கள், ​கோவிட் தடுப்பூசிக்குப் பதிலாக, கவனக்குறைவாக ரேபிஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து மூத்த செவிலியர்கள், வெறிநாய் கடிக்கு போடக்கூடிய ரேபிஸ் தடுப்பூசியை சிவம் ஜெய்ஸ்வாலுக்கு போட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

அதையடுத்து சிவம் ஜெய்ஸ்வாலை, மூத்த மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து லக்கிம்பூர் கேரி தலைமை மருத்துவ அதிகாரி ஷைலேந்திர பட்நாகர் கூறுகையில், ‘சிவம் ஜெய்ஸ்வால் என்பவருக்கு வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோடல் அதிகாரி டாக்டர் விபி பந்த் மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது அவருக்கு போடப்பட்ட ரேபிஸ் தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ரேபிஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை மருந்தாக அந்த தடுப்பூசி செயல்படும். இதுகுறித்து சிவம் ஜெய்ஸ்வாலிடம் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம். தற்போது அவர் நலமாக உள்ளார். இருந்தும் பணியில் அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: