×

தொடர் தோல்விக்கு கொல்கத்தா முற்றுப்புள்ளி வைக்குமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று பலமிக்க ராஜஸ்தான் அணியுடன் கொல்கத்தா அணி மோதுகிறது. தொடர் தோல்வியிலிருந்து அந்த அணி மீளுமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது. ஆனாலும் ராஜஸ்தான் பலமிக்க அணியாகவே இருக்கிறது. துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் (3 சதம், 3 அரைசதத்துடன் 566 ரன்), தேவ்தத் படிக்கல், கேப்டன் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் சுழலில் அஸ்வின் (8 விக்கெட்), யுஸ்வேந்திரசாஹலும் (19 விக்கெட்), வேகத்தில் டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தொடக்க லீக் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 217 ரன்கள் குவித்ததுடன், அந்த அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இன்று மீண்டும் வெற்றிபெற முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. இதுபோல் கொல்கத்தா அணி முதல் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று இந்த சீசனை சூப்பராக தொடங்கியது.  அதன்பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்று பின்தங்கி  நிற்கிறது.

மீதமுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் கொல்கத்தா அணியால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெல்லவேண்டிய  நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. கொல்கத்தா அணியில் நிறைய நட்சத்திர  வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் 11 பேர் கொண்ட சரியான அணியை கண்டறிய  முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (290 ரன்), நிதிஷ்  ராணா (200 ரன்) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடி வருகின்றனர். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அணியின் ஊசலாட்டம் தொடருகிறது. இன்றைய போட்டியிலாவது ஆக்ரோஷமாக ஆடி வெற்றிப்பாதைக்கு திரும்புவார்களா  என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Tags : Kolkata ,Rajasthan , Will Kolkata put an end to the series defeat? Conflict with Rajasthan today
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...