×

கேப்டன்சி ஜடேஜாவுக்கு சுமையாக இருப்பதாக நினைக்கிறேன்: தோனி பேட்டி

புனே: ஐபிஎல் கிரிக்கெட்டில் புனேவில் நேற்று நடந்த 46வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்தில், 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 99 ரன்னில் அவுட் ஆனார். டோனி 8 ரன்னில் வெளியேற டேவான் கான்வே 85 (55 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா ஒரு ரன்னில் களத்தில் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில் நிக்கோலஸ் பூரன் 33 பந்தில், 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வில்லியம்சன் 47, அபிஷேக் சர்மா 39, மார்க்ரம் 17 ரன்னில் ஆட்டம் இழந்தனர். சென்னை பந்துவீச்சில் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட் வீழ்த்தினார். 9வது போட்டியில் சென்னை 3வது வெற்றியை பெற்றது. ஐதராபாத் 4வது தோல்வியை சந்தித்தது. கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது: வெற்றிபெற இது போதுமான இலக்குதான். நாங்கள் சிறப்பாக துவங்கினோம்.

எங்களுக்கு ஏற்றாற்போல் பந்துவீச வைத்தோம். வேகம் குறைந்த பந்துகள்தான் ஒத்துழைப்பு கொடுத்தது. ஸ்பின்னிற்கும் ஒத்துழைப்பு இருந்ததால், பவர் பிளேவுக்கு பிறகு அதிக ஓவர்களை ஸ்பின்னர்கள் வீசினார்கள். கேப்டன் மாற்றத்தால் பெரிய மாற்றங்கள் இல்லை. ஒரு ஓவரில் 4 சிக்சர் பறந்தாலும் பிரச்னை இல்லை. மற்ற 2 பந்துகளை சிறப்பாக வீசி ரன் கொடுக்கக்கூடாது என பவுலர்களிடம் கூறியிருந்தேன். இதுபோன்ற பெரிய ஸ்கோரில் அந்த 2 பந்து தான் ஆட்டத்தை வெல்ல உதவும். இந்த விஷயம் பலமுறை ஒர்க் ஆகியிருக்கிறது. கடந்த சீசனில் ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியும். அவருக்கும் தெரியும். அவர் அதற்கு தயாராக போதுமான நேரம் கிடைத்தது. முதல் 2 ஆட்டங்களுக்கு, நான் அவருடைய வேலையை மேற்பார்வையிட்டேன்.

பின்னர் முடிவெடுப்பதை அவரிடமே விட்டுவிட்டேன். அனைவருக்கும் எல்லாவற்றையும் கரண்டியால் ஊட்ட முடியாது. களத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த முடிவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். கேப்டன்சி அவரது தயாரிப்பு மற்றும் செயல்திறனுக்கு சுமையாக இருப்பதாக நான் நினைக்கிறேன், என்றார். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், 200க்கு மேல் சேஸ் செய்வது எப்போதுமே சவாலான விஷயம். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். அதிக ஸ்கோர் என்பதால் எதிரணியினர் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தனர். பவுலிங்கில் நாங்கள் வாஷியை (சுந்தர்) இழந்தது எங்களுக்கு ஒரு போராட்டமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் வலுவாக திரும்பி வருவோம், என்றார்.


Tags : I think the burden is on Captain Jadeja: Dhoni interview
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ