×

அடிவாரம் செக்போஸ்டில் பறிமுதல் செய்ய உத்தரவு....ஏற்காட்டிற்கு பிளாஸ்டிக் பாட்டில் பைகள் கொண்டு செல்ல தடை: எஸ்பி ஸ்ரீஅபிநவ் அறிவிப்பு

சேலம்: : ஏற்காட்டிற்கு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிப்பதாகவும், மீறி கொண்டு வந்தால் சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் அறிவித்துள்ளார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் குளு குளு கோடை சீசன் களை கட்டியுள்ளது. மேலும், கோடை விழாவிற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகிறது. இதனால், ஏற்காட்டிற்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக மாசில்லா ஏற்காடு-2022 என்ற விழிப்புணர்வு இயக்கத்தை சேலம் மாவட்ட காவல்துறை நேற்று காலை தொடங்கியது. இதன்தொடக்க நிகழ்ச்சி, ஏற்காடு மலை அடிவாரத்தில் நடந்தது. மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் கலந்துகொண்டு, விழிப்புணர்வு அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். அதில், ‘‘ஏற்காடு மலைப்பாதை மற்றும் ஒட்டியுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டிகள் வீசப்படுவது அதிகரித்துள்ளது. இக்கழிவுகள் வன உயிரினங்களுக்கு பெரும் அபாயங்களை ஏற்படுத்துவதோடு, வன வளத்தையும் பாதிக்கிறது.

அதனால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பைகள் கொண்ட தின்பண்டங்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி மது பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து வர வேண்டாம். மீறி எடுத்து வந்தால், ஏற்காடு அடிவார சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்படும்,’’ என்று  கூறப்பட்டுள்ளது.  பின்னர் எஸ்பி அபிநவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சுற்றுலா தலமான ஏற்காட்டை பாதுகாப்பது நமது கடமையாகும். கடந்த 10 ஆண்டிற்கு முன்பு இருந்த வெப்பநிலையையும், தற்போது உள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு பார்த்தால், என்ன மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், இயற்கையை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மீறி கொண்டு வரும் நபர்களிடம் இருந்து அதனை அடிவார சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மலைப்பகுதியிலும் பிளாஸ்டிக் பைகளில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடும் நபர்கள், அதனை கண்ட இடங்களில் வீசக்கூடாது. முறையாக குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.

அப்படி செய்தால், முறைப்படி அப்புறப்படுத்தி மறுசுழற்சிக்கு பயன்படுத்திட முடியும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படவுள்ளது. அதனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள், சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர். இதில், டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளும், ஆயிரக்கணக்கான மது பாட்டில்களும் எடுக்கப்பட்டது. அதனை குப்பை வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தினர். மலைப்பகுதியிலும் பிளாஸ்டிக் பைகளில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடும் நபர்கள், அதனை கண்ட இடங்களில் வீசக்கூடாது.



Tags : SP ,Sriabinaw , Order to seize at the base checkpost .... Plastic bottle for Yercaud Prohibition on carrying bags: Notice of SP Sree Abhinav
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...