நள்ளிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு: உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் முக்கிய பேச்சுவார்த்தை

புதுடெல்லி: டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக நள்ளிரவு புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைன் - ரஷ்யப் போருக்கு மத்தியில் மோடியின் 3 நாள் அரசு முறைப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். வருகிற 4ம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, முதல்நாடாக ஜெர்மனியின் பெர்லினுக்கு இன்று காலை 9.45 மணியளவில் சென்றடைந்தார்.

அவருக்கு அந்நாட்டு தலைவர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும், ஜெர்மனி வாழ் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பெர்லினில் ஜெர்மனியின் புதிய அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் அதிகாரிகள் குழுவை பிரதமர் மோடி சந்தித்தார். இவரை கடந்த ஆண்டு ஜி20  மாநாட்டுக்கு மத்தியில் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது  அவர் ஜெர்மனியின் நிதியமைச்சராக இருந்தார். தொடர்ந்து இந்தியா - ஜெர்மனி இடையேயான 6வது  ஆலோசனை கூட்டத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். பின்னர், ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன் பின்னர் தனது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு டென்மார்க் செல்லும் பிரதமர்  மோடி, அங்கு நடக்கும் 2வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில்  பங்கேற்கிறார். அப்போது, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய  நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார். இறுதியாக, பிரான்ஸ் செல்லும்  பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அதிபர்  இமானுவேல் மேக்ரோனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின்னர்  இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடலிலும் அவர் கலந்து  கொள்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காரணம், ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. ஐ.நா-வில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போதும் கூட, இந்தியா நடுநிலையை வகித்தது. அதனால் மோடியின் ஐரோப்பிய நாடுகளின் பயணத்தில் உக்ரைன் போர் விவகாரம் முக்கியமானதாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின்போது, 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். 7 நாடுகளை சேர்ந்த 8 உலகத் தலைவர்களை அவர் சந்திப்பதுடன் 50 சர்வதேச தொழிலதிபர்கள் உடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார். அதன்பின், தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு  திரும்புகிறார்.

Related Stories: