×

நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்கண்ட், பீகார், அரியானா, உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கடும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் 108 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது. மீதமுள்ள 56 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு 10 சதவீதம் அல்லது  அதற்கும் கீழாக குறைந்துள்ளது.

26 நிலையங்களில் கையிருப்பு ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. முக்கியமான மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாள் இருப்பு வைக்க குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு மதிப்புள்ள நிலக்கரி தேவைப்படுகிறது. மின்பற்றாக்குறையால் தொழில்துறை உற்பத்தியும் பாதியாக குறைந்துள்ளது. உக்ரைன் போரால் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கும் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இருந்தே மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு 17 சதவீதம் குறைந்துள்ளது. மொத்த தேவையான இருப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தற்போது உள்ளது. கடந்த ஆண்டும் இதே நிலைதான் இருந்தது.

அப்போதும் நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், பல மாநிலங்களில் மின் தடை  ஏற்பட்டது. நாட்டின் மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரியில் இருந்து பெறப்படுகிறது. சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் நிலக்கரியானது, கூட்ஸ் ரயில்கள் மூலமாகவே  மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது இருப்பில் வைக்கப்பட்டுள்ள நிலக்கரியை மாநிலங்களுக்கு சப்ளை செய்ய முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் போதிய அளவிற்கான சரக்கு ரயில்கள் இல்லை. மேலும் ஒரே நேரத்தில் பல மாநிலங்களுக்கும் ரயில்கள் மூலம் சப்ளை செய்ய வேண்டியுள்ளதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் ஆர்.கே.சிங், அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நிலக்கரி உற்பத்தி, விநியோகம், இருப்பு குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  


Tags : Home Minister ,Amitsha , Urgent consultation led by Home Minister Amit Shah on coal shortage and electricity problem
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...