×

'சமத்துவம் தழைக்கட்டும், சகோதரத்துவம் நிலைக்கட்டும்' :ஓபிஎஸ் - ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்: அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் எங்கள் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் எங்களது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ராமதாஸ்: ரமலான் என்பது மனிதர்களை அனைத்து வகையிலும் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாள் என்பதில் ஐயமில்லை. மலான் கற்றுத் தரும் இந்தப் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைப்பிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி. அத்தகையதொரு நிலை உருவாகவும், உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

சசிகலா : புனித ரமலான் நோன்பை மேற்கொண்டு, உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து, இறைவனின் திருவருளைப் பெற்று, ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து இன்புறும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ: எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானாம் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள் இந்த நாள்.இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சு.திருநாவுக்கரசர்: நோன்பு உடலையும், உள்ளத்தையும் மேலும் புனிதமாக்குகிறது. இப் புனித நாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், மகிழ்வும் பெருகிடவும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு அனைவரும் நல்ல உடல் நலமுடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்: 21-ஆவது நூற்றாண்டிலும் போர்கள் நடத்தப்படுகின்றன. இன்றைய சூழலில் உலகின் முதன்மைத் தேவை அமைதியும், வளர்ச்சியும் தான். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட ரமலான் திருநாளில் உறுதியேற்றுக் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

சரத்குமார்: இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், சமூக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து உறுதுணையாக செயல்பட்டு வரும் என தெரிவித்து, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்: இந்த நன்னாளில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல், அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும். நெஞ்சார்ந்த ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி : இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு “சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : OBS ,Ramadan , OBS, EPS, Leaders, Ramadan
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து