×

நாமக்கல் அருகே கடத்தப்பட்ட சிறுமி மீட்பு: சந்தேகத்தை கிளப்பும் கடத்தல்

நாமக்கல்: நாமக்கல் அருகே 50 லட்சம் ரூபாய் கேட்டு 15 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் உறவினர்களே கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. நாமக்கல்லை அடுத்த காளி செட்டிப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன் - கெளசல்யா தம்பதியினரின் மகள் தான் கடத்தப்பட்டவர். வாடகை வீட்டில் குடியிருக்கும் சரவணன் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி கவுசல்யாவும் 14 வயது மகன் ஜெய்சன்னும், 11 வயது மகளான மெளனிஷ்னாவும் வீட்டின் மொட்டை மாடியின் மேல் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த 2 நபர்கள் கெளசல்யாவை கத்தியை காட்டி மிரட்டியதோடு அவரையும் சிறுவனையும் கை, கால்களை கட்டி போட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சிறுமியை அவர்கள் கடத்தி சென்றனர். காலையில் இது தொடர்பாக எருமபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சரவணனின் செல்போனுக்கு அழைத்த கடத்தல் காரர்கள் ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். 7 தனிப்படைகளை அமைத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள அலங்காநத்தம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்கில் சிறுமியை கொண்டு வந்து விட்டுவிட்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்து சிறுமியை மீட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர்களான மணிகண்டன் - பொன்னுமணி தம்பதியை கைது செய்து விசாரித்தனர். அப்போது 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தையிடம் ரூ.50,000 கடன் வாங்கியதாக மணிகண்டன் தெரிவித்தார். ஆனால் கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்த போதும் தம்மை பார்த்த இடங்களிலெல்லாம் சரவணன் தகாத வார்த்தைகளில் பேசியதாலேயே அவரது மகளை கடத்தியதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். மணிகண்டன் பொன்னுமணியை கைது செய்து போலீசார் அவர்களின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Namakkal , Recovery of abducted girl near Namakkal: Suspicious abduction
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை