×

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவு!!

டெல்லி : மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.  அதன்படி, நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்  செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே மே 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மே 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 15 இரவு 9 மணி வரை நீட் விண்ணப்பங்கள் பெறப்படும். அன்று இரவு 11.50 மணிவரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக தேர்வுக்கான நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அசாமி, பெங்காலி, ஆங்கிலம். குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.மேலும் விண்ணப்ப விவரங்கள், தோ்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தோ்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ள முடியும்.

Tags : National Examinations Agency ,NEET , Medical Studies, NEED Entrance Examination, National Examination Agency
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...