மேற்கு வங்கத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக பயணிகள் விமானம் டர்புலன்ஸ்-ல் சிக்கி குலுங்கியதால் 12 பயணிகள் படுகாயம்

கொல்கத்தா : ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மேற்கு வங்கத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக டர்புலன்ஸ் எனப்படும் இயற்கை சூழலில் சிக்கி குலுங்கியதால் 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் பி737 ரக பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. தரையிறங்கும் முன்பாக வானில் திடீரென டர்புலன்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் விமானம் திடீரென சில நிமிடங்கள் பயங்கரமாக குலுங்கியது.

அப்போது சீட் பெல்ட்டை சரியாக அணியாதவர்கள் உள்ளிட்ட 12 பேர் கீழே விழுந்தும் முன் இருக்கைகளில் மோதியும் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் விமானம் எந்த சிக்கலும் இன்றி பத்திரமாக தரை இறக்கப்பட்டது. காயம் அடைந்த 12 பயணிகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானங்கள் பறக்கும் போது, காற்றின் அழுத்தம் மாறுபாடு அல்லது வானில் காற்று இல்லாத வெற்றிடத்தில் பயணிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த டர்புலன்ஸ்  பிரச்சனை ஏற்படுகிறது.

அப்போது விமானம் பயங்கரமாக குலுங்குவதும் ஆடுவதும் அல்லது விமானத்தின் வேகம் அதிகரிப்பதும் நிகழும். என்றாலும் இந்த பிரச்சனைகளால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படுவதில்லை.கடந்த ஜூன் 8ம் தேதி மும்பையில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டு இருந்த விஸ்தாரா விமானம்,  டர்புலன்ஸ் என்ற சீரற்ற காற்றழுத்த கொந்தளிப்பால் குலுங்கியதில் 3 பயணிகள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: