அறையில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இருவர் கைது

சென்னை:  மது போதையில் 14 வயது சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் வனஜா (44), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் வேலைக்கு செல்லும்போது, தனது 14 வயது மகளையும் அழைத்து சென்றுள்ளார். மதியம் வேலை அதிகமாக இருந்ததால், மகளை மட்டும் சாப்பிட்டு வர வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், வெகுநேரம் ஆகியும் மகள் வராததால், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மகள் இல்லாததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, ஒரு வீட்டிலிருந்து மகளின் அழுகுரல் கேட்டதால், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, ஒரு அறையின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 2 பேர் மது அருந்தியபடியே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர்களிடம் இருந்து மகளை மீட்ட வனஜா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக் நகர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த செல்வம் (30), கார்த்திக்கேயன் (22) ஆகியோர், மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, இருவரையும்  கைது செய்து, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: