×

நீட்டுக்கு எதிரான தீர்மானத்தில் ஆளுநரின் மவுனம் 7 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயல்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு

சென்னை:  திமுக மாணவர் அணி சார்பில் கல்வி, சமூகநீதி கூட்டாச்சி தத்துவம் குறித்த தேசிய அளவிலான 2 நாள் மாநாட்டின் நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் கேரள மாநில தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராஜீவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா, கேரளா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சந்தோஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, சமூக செயற்பட்டாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கண்ணன் கோபிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கன்னையா குமார், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சீமா சிஷ்டி,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ  பேசியதாவது:
தங்கை அனிதாவின் அண்ணன் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். அனிதாவின் மரணம் தற்கொலை இல்லை, அது கொலை. மத்தியில் இருந்த பாஜ அரசும், அதன் கூட்டணியில் இருந்து அதிமுக அரசும் சேர்ந்து செய்த கொலை. கடந்த 4 ஆண்டுகளில் 16 பேர் நீட் தேர்வால் மரணமடைந்து உள்ளனர். இறந்த மாணவர்கள் குடும்பத்தினர் தன் கையை பிடித்து, நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது.  நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார். திமுக அரசின் கோரிக்கையை, எச்சரிக்கையை ஏற்று விரைவில் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்புவார்.  திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும்.

7 கோடி மக்களின் உணர்வை மதிக்கும் வகையில் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மவுனம் காப்பது 7 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயல், தொடர்ந்து தமிழகம் நீட்டுக்கு போராடும், ஏனைய மாநிலங்களும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுக்க இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

கல்வி மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும்.மாநில அரசு அடிமைகள் என்று ஒன்றிய  பாஜ அரசு நினைக்கிறது. ஆனால் தமிழர்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதை புரிய வைப்போம். பாஜ ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும் . இவ்வாறு பேசினார்.

Tags : Governor ,Tamils ,Udayanidhi Stalin ,MLA , Neat choice, governor's silence, insulting act, Udayanidhi Stalin MLA
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!