புதுப்படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை திருமணத்துக்கு தயாராகும் சாய் பல்லவி?

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், ‘தியா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’, சூர்யா ஜோடியாக ‘என்ஜிகே’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பாவக்கதைகள்’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், மீண்டும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தும் அவரது கைவசம் ‘விராட பர்வம்’ என்ற படம் மட்டுமே இருக்கிறது. இதில் அவர் பெண் நக்சலைட் கேரக்டரில் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் தங்கையாக ‘போலா சங்கர்’ படத்தில் வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். மேலும் சில புதுப் பட வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை. இதனால், சாய் பல்லவி திருமணம் செய்துகொள்ள தயாராகி விட்டார் என்றும், பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டனர் என்றும், அதனால்தான் அவர் புதுப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்றும் தெலுங்கு படவுலகில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து சாய் பல்லவி அளித்த பேட்டியில், ‘தெலுங்கில் எனக்கு ஒரு தனி இமேஜ் இருக்கிறது. சாய் பல்லவி என்றால் கனமான, நடிப்புத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். என்றாலும், அவரது திருமணம் பற்றிய வதந்திகள் ஓயவில்லை.

Related Stories: