×

கேப்டன் ராகுல், மோஷின் அசத்தல் 6 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது லக்னோ

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 4.2 ஓவரில் 42 ரன் சேர்த்தது. டி காக் 23 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் லலித் யாதவ் வசம் பிடிபட்டார்.

அடுத்து ராகுலுடன் தீபக் ஹூடா இணைந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. ஹூடா 52 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தாகூர் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி 77 ரன் குவித்த ராகுல் (51 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), தாகூர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. அந்த அணிக்கு உதிரியாகவே 17 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 ரன், க்ருணால் பாண்டியா 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் ஷர்துல் 4 ஓவரில் 40 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 196 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா 5 ரன், டேவிட் வார்னர் 3 ரன்னில் வெளியேற, டெல்லி 3 ஓவரில் 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் - கேப்டன் ரிஷப் பன்ட் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர். மார்ஷ் 37 ரன் எடுத்து வெளியேற, லலித் யாதவ் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பன்ட் 44 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ரோவ்மன் பாவெல் 35 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மோஷின் வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஷர்துல் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

கடைசி 20 பந்தில் 48 ரன் தேவைப்பட்ட நிலையில், அக்சர் - குல்தீப் ஜோடி வெற்றிக்காகப் போராடியது. இவர்களின் அதிரடி ஆட்டம் டெல்லியை இலக்குக்கு வெகு அருகே அழைத்துச் சென்றாலும், 6 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. அக்சர் 42 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), குல்தீப் 16 ரன்னுடன் (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில், மோஷின் கான் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். சமீரா, பிஷ்னோய், கவுதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


Tags : Rahul ,Moshin ,Delhi ,Lucknow , Captain Rahul, Moshin, Delhi, Lucknow
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...