அரியானா காங். தலைவர் பதவிக்கு பிஷ்னோய் தான் பொருத்தமானவர்: சுர்ஜேவாலா சர்ச்சை கருத்து

சண்டிகர்: `அரியானா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குல்தீப் பிஷ்னோய் பொருத்தமானவராக இருந்திருப்பார்,’ என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்லில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், வரும் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க, தேசிய, மாநில அளவில் மாற்றங்கள் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செலஜாவுக்கு பதிலாக, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு மிகவும் நெருக்கமான உதய் பான் கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார். அதே நேரம், மாநில அளவில் ஏதாவது பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஆதம்பூர் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் மிகவும் அதிருப்தி அடைந்தார். தனது ஆதரவாளர்களிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து உண்மை நிலவரத்தை அறியும் வரை அமைதி காக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா, ‘அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குல்தீப் பிஷ்னோய் மிகவும் பொருத்தமானவராக இருந்திருப்பார். ஆனால், யாரை மாநிலத் தலைவராக நியமிப்பது என்று கட்சி தலைமை தான் முடிவு எடுக்கிறது. குல்தீப் மிகவும் திறமையானவர், தகுதியானவர், பண்பட்டத் தலைவர். விரைவில் கட்சி தலைமை அவரிடம் பேசி, அவருக்கு பொறுப்பான பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்,’ என தெரிவித்துள்ளார். கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக சுர்ஜேவாலா இந்த கருத்தை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: