ரயில்வே காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழக விண்ணப்பதாரர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம்: மதுரை எம்.பி. கேள்விக்கு ரயில்வே அதிகாரிகள் மழுப்பல் பதில்

மதுரை: ரயில்வேயில் அதிகாரி உள்ளிட்ட 601 காலியிடங்களுக்கான 2ம்நிலை தேர்வு வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். இதனிடையே தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே வாரிய தலைவருக்கு கடிதம் எழுதினார்.

 இதற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் அளித்த பதிலில், ‘‘முந்தைய முதல்நிலை தேர்வு பல நாட்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனால் ஒரு தனி விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிக்க நார்மலைசேஷன் என்ற வழியை பின்பற்ற வேண்டியது இருந்தது. இவ்வழிமுறையால், ஒருவர் பெற்ற உண்மையான மதிப்பெண்கள்  கணக்கில் எடுக்க முடியாமல் இருந்தது. வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் அமைந்திருந்தது.

வினாத்தாள்களின் வேறுபாடு திறமையான போட்டியாளர்களை மேலும் கீழுமாக இறக்கிவிட்டது. இதனை தவிர்க்க ஒரே கேள்வித்தாளில் ஒரே நாளில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இப்போது இந்த 2ம் நிலை தேர்வு ஒரே நாளில் மே 9ம் தேதி ஒரே கேள்வித்தாளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்காக அதிக மையங்கள் தேவைப்படுகிறது. இதனால் இத்தேர்வை பல மாநிலங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது’’ என கூறியுள்ளனர்.

 தமிழக அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பல லட்சம் பேர் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் எழுதும் போது, 60 ஆயிரம் பேரை தமிழகத்தில் எழுத ரயில்வே வாரியம் அனுமதிக்கவில்லை என்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: