ஆன்மிக சுற்றுப்பயணம் 90 சதவீதம் முடிந்தது அரசியல் பயணத்துக்கு விரைவில் தயாராகிறார் சசிகலா: தஞ்சையில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கிறார்

சென்னை: சசிகலாவின் ஆன்மிக சுற்றுப்பயணம் விரைவில் முடிய உள்ளதையடுத்து அவர் கூடிய விரைவில் அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலையானார். சென்னை வந்த சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார்.

இதனால், அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பல ஆதரவாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினர். பின்னர், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா  பேசிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாவட்டம் தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போதெல்லாம் அங்கு உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகிறார். இந்தநிலையில், சசிகலாவின் ஆன்மிக பயணம் 90 % முடிவு பெற்றுள்ளதாகவும் அவர் விரைவில் அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 10ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் விழாவில் அவர் கலந்துகொண்டு தன்னுடைய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் ஒரு மாத காலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். அப்போது, மாவட்ட அளவில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேச சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் இந்த சுற்றுப்பயணத்தின் போது அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னணி நிர்வாகிகளை சந்தித்து பேசவும் சசிகலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த முடிவால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: